நெல்லை தாமிரபரணி ஆற்றில் மணல் கடத்தல்; டிரைவர் கைது டிப்பர் லாரி பறிமுதல்
நெல்லை வண்ணார்பேட்டை தாமிரபரணி ஆற்றில் இருந்து லாரியில் மணல் கடத்திய டிரைவரை போலீசார் கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர்.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் தற்போது ஆறு, குளங்களில் அனுமதி இல்லாமல் மண், மணல் கடத்துவது அதிகரித்துவிட்டது. மேலும் குளங்களில் அனுமதி இல்லாமல் பலர் செங்கல் சூளைக்கு மண் கடத்தி செல்வதாகவும், அனுமதி இல்லாமல் பலர் செங்கல் சூளை நடத்துவதாகவும் மாவட்ட கலெக்டருக்கு தகவல் கிடைத்தது. அனுமதிஇல்லாமல் குளத்து மண் மற்றும் ஆற்று மணல் கடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கலெக்டர் ஷில்பா உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து உதவி கலெக்டர்கள், தாசில்தார்கள் மற்றும் வருவாய்த்துறையினரும், போலீசாரும் அனுமதி இல்லாமல் குளத்து மண், மணல் கடத்துபவர்களை பிடித்து கைது செய்து வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் நெல்லை வண்ணார்பேட்டை தாமிரபரணி ஆற்றில் இருந்து நேற்று முன்தினம் இரவில் டிப்பர் லாரியில் மணல் கடத்தி செல்வதாக பாளையங்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் அன்பரசு ஆகியோர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
போலீசார் வருவதை கண்ட மணல் கடத்தல் கும்பல் டிப்பர் லாரியை வேகமாக செலுத்தி தப்பிக்க முயற்சித்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை விரட்டி சென்று லாரியை மடக்கினார்கள். அப்போது லாரியில் இருந்த நபர்கள் கீழே குதித்து தப்பி ஓடினார்கள். டிரைவர் சீவலப்பேரியை சேர்ந்த செல்லத்துரை(வயது29) என்பவரை போலீசார் கைது செய்து டிப்பர் லாரியை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story