மழைநீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் அதிகாரிகளுக்கு சுற்றுச்சூழல் பொருளாதார ஆலோசகர் அறிவுறுத்தல்


மழைநீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் அதிகாரிகளுக்கு சுற்றுச்சூழல் பொருளாதார ஆலோசகர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 10 July 2019 4:30 AM IST (Updated: 10 July 2019 1:51 AM IST)
t-max-icont-min-icon

மழைநீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு சுற்றுச்சூழல் பொருளாதார ஆலோசகர் அறிவுறுத்தினார்.

திருச்சி,

திருச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மத்திய குழு ஜல்சக்தி அபியான் நீர் மேலாண்மை இயக்கம் தொடர்பாக பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, குடிநீர் வடிகால் வாரியம், வேளாண் பொறியியல் துறை, நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகிய துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பருவநிலை மாற்ற சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை பொருளாதார ஆலோசகர் யஷ்வீர்சிங் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் யஷ்வீர்சிங் பேசும்போது கூறியதாவது:-

ஜல்சக்தி அபியான் திட்ட நீர் மேலாண்மை இயக்கம் கடந்த 1-ந் தேதி இந்திய அரசால் கொண்டு வரப்பட்டது. பருவ காலங்களில் பெய்யும் மழை நீரை பூமிக்கு அடியில் சேகரிக்க வேண்டும். இதன்மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இந்த திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் மழைநீரை சேமிக்க வசதிகளை ஏற்படுத்த வேண்டும். விவசாயிகள் தங்கள் நிலங்களில் பண்ணை குட்டைகள் அமைப்பதை ஊக்குவிக்க வேண்டும். பழமையான குளங்களை புனரமைப்பதன் மூலம் மழைநீரை சேமிக்க முடியும்.

மழைநீர் சேமிப்பு தொடர்பாக ஊரக வளர்ச்சி துறையின் மூலம் நீர் ஆதாரங்கள் உள்ள இடங்களில் தடுப் பணைகள் கட்ட வேண்டும். திருச்சி மாவட்டத்தில் 2015-ம் ஆண்டு நீர்மட்டம் 11.88 மீட்டர் ஆழத்தில் இருந்தது. 2016-ம் ஆண்டு 12.25 மீட்டர் ஆழத்திலும், 2017-ம் ஆண்டு 18.42 மீட்டர் ஆழத்திலும், 2018-ம் ஆண்டு 19.23 மீட்டர் ஆழத்திலும் இருந்தது. 2019-ம் ஆண்டு 22.84 மீட்டர் ஆழத்திலும் உள்ளது.

மழைநீர் சேமிப்பு தொடர்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, பாட்டு, பேச்சு மற்றும் வினாடி-வினா போட்டி போன்ற பல்வேறு போட்டிகளை நடத்தி சிறந்த மாணவர்களை தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கலாம். இதன்மூலம் பெற்றோருக்கும், மழைநீர் சேமிப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படை, தன்னார்வலர்கள், ரோட்டரி சங்கம் போன்ற அமைப்புகளை பயன்படுத்தி மழைநீர் சேமிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மனிதவள மேம்பாடு மற்றும் உயர்கல்வித்துறை இயக்குனர் சில்ஜோ, உணவு பதப்படுத்தும் தொழில்கள் துறை இயக்குனர் ஜீஜேந்திரகுமார், மத்திய நீர் ஆணைய இயக்குனர் தீரஜ் சிங்கால், மத்திய நீர் ஆணைய துணை இயக்குனர் திலீப் குமார் ஜா, மத்திய நீர் ஆணைய இயக்குனர் அபேஷ்குமார், தொழில்நுட்ப ஆலோசகர் அமுல் ஜட்கார் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த குழுவினர் நேற்று திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று நீர்நிலைகளை நேரடியாக பார்வையிட்டனர்.

Next Story