இன்சூரன்ஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி அனைத்து மோட்டார் வாகன தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


இன்சூரன்ஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி அனைத்து மோட்டார் வாகன தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 July 2019 10:45 PM GMT (Updated: 9 July 2019 8:23 PM GMT)

இன்சூரன்ஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி அனைத்து மோட்டார் வாகன தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி,

சுற்றுலா பஸ், வேன், கார் உள்ளிட்ட அனைத்து மோட்டார் வாகனங்களை இயக்கும் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மோட்டார் வாகன போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் செல்வம் தலைமை தாங்கினார்.

மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்யக்கூடாது, இன்சூரன்ஸ் கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும், பெட்ரோல், டீசல் மீதான வரிகளை ரத்து செய்து பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வரவேண்டும், சுங்க கட்டணத்தை உயர்த்தக்கூடாது, சுங்க சாவடிகளை அப்புறப்படுத்தவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் பற்றி திருச்சி மாவட்ட சி.ஐ.டி.யு. செயலாளர் ரெங்கராஜன் பேசுகையில், ‘மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்தால் சாலையோரம் இருசக்கர வாகனம் மற்றும் கார் பழுது நீக்குவோர் தொழில் செய்ய முடியாது. பழுதுநீக்குதல் தொடர்பான அனைத்து உரிமைகளும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சென்று விடும்.

மேலும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களை தனியார்மயமாக்க மத்திய அரசு எடுத்து வரும் முயற்சிகளையும் கைவிட வேண்டும், திருச்சியில் ஓடும் மோட்டார் வாகனத்திற்கு புகை சான்றிதழ் பெறுவதற்காக மணப்பாறைக்கும், பெரம்பலூருக்கும் அனுப்பும் முறையை கைவிட வேண்டும்’ என்றார்.

இதில், அனைத்து மோட்டார் வாகன தொழிலாளர் சங்க செயலாளர் வீரமுத்து மற்றும் நல்லய்யா உள்பட சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story