தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடம்: புதுச்சேரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், அ.தி.மு.க. வலியுறுத்தல்


தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடம்: புதுச்சேரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், அ.தி.மு.க. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 10 July 2019 4:45 AM IST (Updated: 10 July 2019 1:57 AM IST)
t-max-icont-min-icon

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடத்தை பெற புதுவை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அ.தி.மு.க. வலியுறுத்தி உள்ளது.

புதுச்சேரி,

புதுவை அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவை மாநிலத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் நமது மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் புறக்கணிக்கப்படுவது தொடர்கதையாகி உள்ளது. தற்போது ஜிப்மர் மருத்துவமனையில் புதுச்சேரி மாணவர் ஒதுக்கீட்டில் பிற மாநில மாணவர்கள் போலி குடியிருப்பு சான்றிதழ்கள் பெற்று சேர்ந்திருப்பது அம்பலமாகி உள்ளது. இந்த விவகாரத்தில் நான் உள்பட பல்வேறு சமூக அமைப்புகளில் எதிர்ப்புகளால் தற்போது சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது.

இந்த விவகாரம் இப்படியிருக்க தற்போது இன்னும் சில நாட்களில் சென்டாக் கலந்தாய்வு தொடங்கப்பட உள்ள நிலையில் நமது மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகளில் புதுச்சேரியை சேர்ந்த மாணவர்களுக்கு 50 சதவீத இடங்கள் பெறுவது சம்பந்தமாக பல ஆண்டு களாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் இந்த பிரச்சினை ஏற்படும்போது கண்டிப்பாக புதுச்சேரியை சேர்ந்த மாணவர்களுக்கு 50 சதவீத இடங்கள் பெறப்படும் என்று அரசின் சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டாலும் இதுவரை நிறைவேற்றப் படாமல் உள்ளது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதுவை மருத்துவ மாணவர் சேர்க்கை சம்பந்தமாக தொடரப்பட்ட வழக்கில் இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. அப்போது கவர்னர், சட்டமன்றத்தில் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை புதுச்சேரி மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய தீர்மானம் நிறைவேற்றினால் கண்டிப்பாக 50 சதவீத இடங்களைப்பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

ஆனால் இன்றுவரையில் புதுச்சேரி முதல்-அமைச்சர் 50 சதவீத இடங்களைப்பெற சிறு துரும்பைக்கூட நகர்த்தவில்லை. இந்த செயல்பாடு தனியார் மருத்துவ கல்லூரிகளுடன் தொடர்பு வைத்துக்கொண்டு புதுச்சேரி மாணவர்களுக்கு துரோகம் செய்வதுபோல் உள்ளது. தமிழக அரசு தனியார் மருத்துவக்கல்லூரிகளில் 65 சதவீத மருத்துவ இடங்களை பெற்று வருகிறது என்பது இந்த நேரத்தில் சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்று.

முதல்-அமைச்சர் நாராயணசாமி இனியும் காலம் தாழ்த்தாமல் விரைவில் கூட்டப்பட உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் புதுச்சேரியை சேர்ந்த மாணவர் களுக்கு 50 சதவீத இடங்களை பெற உரிய தீர்மானத்தை நிறைவேற்றவேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் ஓம்சக்தி சேகர் கூறியுள்ளார்.

Next Story