குடிநீர் தேடி அலையும் மக்கள்


குடிநீர் தேடி அலையும் மக்கள்
x
தினத்தந்தி 10 July 2019 4:15 AM IST (Updated: 10 July 2019 6:02 AM IST)
t-max-icont-min-icon

தண்ணீர் பற்றாக்குறை என்பது இன்றைக்கு உலகம் எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாகும். நாம் வாழ்வதற்கு தண்ணீர் மிகவும் இன்றியமையாதது என்பது எல்லோரும் அறிந்ததே.

கடலூர்,

இயற்கையாக கிடைத்த தண்ணீரை தற்போது காசு கொடுத்து வாங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள இடங்களில் நாளுக்கு நாள் தண்ணீரின் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. காரணம் பருவநிலை மாற்றத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் போதிய அளவில் மழை பெய்யவில்லை. மேலும் கடந்த காலங்களை விட வெயிலின் தாக்கமும் இந்த ஆண்டு அதிகளவில் உள்ளது.

இதனால் போதிய மழை பெய்யாததாலும், வெயிலின் தாக்கத்தாலும் கிட்டத்தட்ட ஓரிரு ஏரி, குளங்களை தவிர அனைத்து நீர்நிலைகளும் தண்ணீரின்றி வறண்டு விட்டன. தென்மேற்கு பருவமழையாவது கைகொடுக்கும் என்று காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

அந்த வகையில் தண்ணீர் தட்டுப்பாடு கடலூர் மாவட்டத்தையும் விட்டு வைக்கவில்லை. தமிழகத்தில் மழை வெள்ளத்துக்கு பெயர் போன கடலூர் மாவட்டத்தில் எந்தவொரு ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. மாவட்டத்தில் பெரும்பாலான ஏரி, குளங்கள் முற்றிலும் வறண்டு விட்டன. நிலத்தடி நீர்மட்டமும் அதலபாதாளத்துக்கு சென்று விட்டதால் ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்த வெளி கிணறுகளில் தண்ணீர் இல்லை.

இதனால் பல கிராமங்களில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. காசு கொடுத்து தண்ணீர் வாங்க இயலாத ஏழை, எளிய மக்கள் வெகு தொலையில் உள்ள விளை நிலங்களுக்கு அலைந்து திரிந்து தண்ணீர் பிடித்து வந்து பயன்படுத்துகின்றனர்.

மேலும் பல இடங்களில் பொதுமக்கள் குடிநீர் கேட்டு ஆர்ப்பாட்டம், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை போராட்டத்தை காணாத மக்களும் குடிநீருக்காக வீதியில் இறங்கி போராட்டம் நடத்துகின்றனர். மேலும் பொதுக்குழாய்களில் தண்ணீர் வருமா? என்று பொதுமக்கள் மணிக்கணக்கில் காத்துக் கிடக்கின்றனர்.

அந்த வகையில் கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை பகுதி மக்கள் குடிநீர் தேடி விளை நிலங்களுக்கும், அருகில் உள்ள கிராமங்களுக்கும் அலைந்து திரிகின்றனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

புதுப்பேட்டை அருகே உள்ள குடுமியான் கு ப்பம் காலனி பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் தேவைக்காக அதே பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, அதில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் புதுப்பேட்டை பகுதியில் நிலவும் கடும் வறட்சி காரணமாக ஆழ்துளை கிணறு தண்ணீர் இன்றி வறண்டது. இதனால் இப்பகுதி மக்களுக்கு கடந்த சில மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

இதனால் குடிநீர் இன்றி பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து பண்ருட்டி வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பொதுமக்கள் வெகு தொலைவில் உள்ள விளை நிலங்களுக்கு கால் கடுக்க காலி குடங்களுடன் நடந்து சென்று, தண்ணீர் பிடித்து வருகின்றனர். மேலும் சிலர் சரக்கு வாகனங்களில் குடங்கள், பாத்திரங்கள் உள்ளிட்டவற்றை வைத்துக் கொண்டு தண்ணீர் கிடைக்கும் இடங்கள் தேடி அலைந்து திரிகின்றனர்.

எனவே இப்பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல் விருத்தாசலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கம்மாபுரம், மங்கலம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் சுமார் 4 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்திருந்தனர். நன்கு செழித்து வளர்ந்து வந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் அனைத்து நெற்பயிர்களும் தண்ணீர் இன்றி கருகி விட்டன. இதனால் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து பராமரித்து வந்த பயிர்கள், தங்கள் கண்முன்னே கருகி வருவதை கண்டு விவசாயிகள் கண்ணீர் விடுகின்றனர். ஒரு சில விவசாயிகள் விளை நிலத்தில் கால்நடைகளை மேய்ச்சலுக்காக விடுகின்றனர்.

இதுகுறித்து சாத்துக் கூடல் பகுதியை சேர்ந்த விவசாயி சக்திவேல் கூறுகையில், கடந்த ஆண்டு பருவமழை போதிய அளவில் பெய்யாததால் ஏரி, குளங்கள் முழுமையாக நிரம்பவில்லை. தேங்கிய சிறிதளவு தண்ணீரும் வற்றிவிட்டது. இதனால் நிலத்தடி நீர் அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது. இதுவரை இல்லாத அளவிற்கு கிணறுகளும் வறண்டு வருகின்றன. ஏற்கனவே சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி வருகின்றன. மழை பெய்தால் தான் இனிமேல் விவசாயம் செய்ய முடியும்.

கருகிய நெற்பயிர்களை என்ன செய்வதென்று தெரியாமல் கால்நடைகளுக்கு தீவனமாக்கி வருகிறோம். எனவே வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார். 

Next Story