வானவில் : இதய துடிப்பு மானிட்டருடன் லெனோவா ஸ்மார்ட்வாட்ச்
மின்னணு பொருட்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள லெனோவா தற்போது இதயத் துடிப்பு கண்காணிப்பு வசதி கொண்ட ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்துள்ளது.
‘ஸ்மார்ட் பேண்ட் கார்டியோ ஹெச்.எக்ஸ்.ஓ6.ஹெச்’ என்ற பெயரில் இது வெளிவந்துள்ளது. இதன் விலை ரூ.1,500. முதல் முறையாக முன்னணி பிராண்ட் ஸ்மார்ட் வாட்ச் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் இதய துடிப்பை கண்காணிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 100 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளது.
இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 20 நாட்கள் வரை செயல்படும். நீர் புகா தன்மை கொண்டிருப்பதால், நீச்சல் வீரர்களும் இதை பயன்படுத்த முடியும். இது 0.87 அங்குல ஓலெட் திரையைக் கொண்டது. ஓடுதல், நடை பயிற்சி, சைக்கிள் ஓட்டுவது உள்ளிட்டவற்றின் போது எவ்வளவு கலோரி எரிக்கப்பட்டது என்ற விவரம் மட்டுமின்றி, ஸ்மார்ட்போனுக்கு வரும் குறுஞ்செய்திகளையும் படிக்கலாம். அழைப்புகளுக்கு இதன் மூலமும் பதில் அளிக்கலாம். இதில் ஸ்லீப் மானிட்டரிங் சிஸ்டம் என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்களின் தூக்கத்தையும் கண்காணிக்கும்.
அதேபோல ஓரிடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருந்தால் அதையும் எச்சரிக்கும். இதனால் அலுவலகத்தில் நீண்ட நேரம் அமர்ந்தபடி பணியாற்றுபவர்களுக்கு இது மிகச் சிறந்த சாதனமாகும்.
இதன் ஸ்டிராப்பை கழற்றி மாட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மென்மையாகவும், தோலில் அலர்ஜி ஏற்படுத்தாததாகவும் உள்ளது. இதை சார்ஜ் செய்ய யு.எஸ்.பி. போர்ட் வசதி உள்ளது.
Related Tags :
Next Story