வானவில் : இந்திய சந்தையில் களமிறங்கும் எம்.ஜி. மோட்டார் நிறுவனம்


வானவில் : இந்திய சந்தையில் களமிறங்கும் எம்.ஜி. மோட்டார் நிறுவனம்
x
தினத்தந்தி 10 July 2019 6:08 PM IST (Updated: 10 July 2019 6:08 PM IST)
t-max-icont-min-icon

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த எம்.ஜி. மோட்டார் நிறுவனத்தின் புதிய ரகக்கார் எம்.ஜி. ஹெக்டார் என்ற பெயரில் சமீபத்தில் அறிமுகமானது.

மூன்று விதமான வேரியன்ட்களில் இது அறிமுகமாகிஉள்ளது. பெட்ரோலில் ஓடும் மாடல், பெட்ரோல் மற்றும் சிறிதளவு ஹைபிரிட் மற்றும் டீசலில் ஓடும் கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அறிமுக விலையாக ரூ.12.18 லட்சம் முதல் ரூ.16.88 லட்சமாக நிர்ணயித்துள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த காரணத்தால் முன்பதிவு ஆரம்பமானதிலிருந்தே இதுவரை 10 ஆயிரம் பேர் இந்த காரை வாங்க முன்பதிவு செய்துள்ளனர். அந்த அளவுக்கு இப்புதிய ரகக் கார் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்பதிவு செய்தவர்களில் 70 சதவீதம் பேர் டி.சி.டி. எனப்படும் ஆட்டோமேடிக் காரைத்தான் தேர்வு செய்துள்ளனர். ஹைபிரிட் மாடலை 15 சதவீதம் பேர் வாங்க முன்பதிவு செய்துள்ளனர்.

ஸ்டைல், சூப்பர், ஸ்மார்ட், ஷார்ப் என நான்கு வேரியன்ட்கள் வெளி வர உள்ளன. இதில் பிரீமியம் மாடலாக ஷார்ப் இருக்கும். எல்.இ.டி. முகப்பு விளக்கு, டி.ஆர்.எல். விளக்கு, இரட்டை வண்ணம் கொண்ட அலாய் சக்கரங்கள், 10.4 அங்குல தொடுதிரை, ஆண்ட்ராய்டு, ஆப்பிள் கார் பிளே ஆகியவற்றோடு ஐ ஸ்மார்ட் கனெக்டிவிடி வசதியும் இதில் உள்ளது. புதிய தலைமுறை கார்களில் இப்போது கனெக்டிவிடி வசதி அளிக்கப்படுகிறது. சமீபத்தில் ஹூண்டாய் வென்யூ மாடலில் புளூ ஸ்மார்ட் கனெக்டிவிடி வசதி அளிக்கப்பட்டது. இதுபோல ஒவ்வொரு நிறுவனமும் தனித்தனி கனெக்டிவிடி வசதியை அளிக்கின்றன.

அந்த வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அதிகம் கொண்ட ஹெக்டார் மாடலில் ஐஸ்மார்ட் கனெக்டிவிடி வசதி அளிக்கப்படுகிறது. தற்போது மாதத்துக்கு 2 ஆயிரம் கார்களை மட்டுமே உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இந்நிறுவன ஆலை உள்ளது.

தற்போது புதிதாக இந்தக் காரை வாங்க விரும்புவோர் குறைந்தபட்சம் 7 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். சீன தயாரிப்பான ஹெக்டார் இந்திய சாலைகளில் இனி அதிக அளவில் வலம் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

Next Story