நாகர்கோவில் அருகே இரட்டை கொலை: அண்ணனுக்கு பதில் தம்பியை தீர்த்து கட்டிய கும்பல்


நாகர்கோவில் அருகே இரட்டை கொலை: அண்ணனுக்கு பதில் தம்பியை தீர்த்து கட்டிய கும்பல்
x
தினத்தந்தி 11 July 2019 4:30 AM IST (Updated: 10 July 2019 9:10 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் அருகே நடந்த இரட்டை கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அண்ணனுக்கு பதில் தம்பியை தீர்த்து கட்டியதாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பரபரப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில்,

நாகர்கோவில் அருகே உள்ள வண்டிகுடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முருகேசபெருமாள் குமார். இவருடைய மனைவி ராதிகா (வயது 39). இவர்களுடைய மகன் அர்ஜூன் (17). இவரும், அதே பகுதியை சேர்ந்த அஜித்குமார் (21) என்ற கட்டிட தொழிலாளியும் நண்பர்கள். சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் சி.டி.எம்.புரம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள்களில் வந்த ஒரு கும்பல் 2 பேரையும் வழிமறித்து சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பி விட்டது.

இதுகுறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இதற்கிடையே கொலையில் தொடர்புடைய ரமேஷ், சுந்தர் ஆகிய 2 பேரும் சென்னை தாம்பரத்தில் உள்ள குற்றவியல் கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களை புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அவர்கள் 2 பேரையும் சுசீந்திரம் போலீசார், போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

இந்தநிலையில் கொலை செய்யப்பட்ட அர்ஜூனின் தாயார் ராதிகா, தந்தை முருகேசபெருமாள் குமார் மற்றும் உறவினர்கள் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு பரபரப்பு புகார் மனு கொடுத்தனர். அதில் ராதிகா கூறியிருப்பதாவது:–

நான் வண்டிகுடியிருப்பில் எனது கணவர் மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வந்தேன். கடந்த 7–ந் தேதி அன்று சி.டி.எம். புரத்தில் வைத்து எனது இளைய மகன் அர்ஜூனை ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்தது. அதுதொடர்பாக சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் அன்றைய தினம் இரவு 12.30 மணி வரை என்னை விசாரணைக்காக அழைத்துச்சென்று வைத்திருந்தனர். போலீசார் எனது மூத்த மகன் அஜித்தையும் இந்த வழக்கில் சம்பந்தப்படுத்தி என்னிடம் விசாரித்தனர்.

அப்போது நான் அவர்களிடம், கடந்த 30–ந் தேதி அன்று காலை 8.30 மணிக்கு எனது வீட்டுக்கு வல்லன்குமாரவிளை, காமராஜர் நகர், அரசன்காட்டுவிளை ஊரை சேர்ந்த 4 வாலிபர்கள், நான் வீட்டில் இருந்த போது எனது மூத்த மகன் அஜித்தை தேடி வந்து என்னிடம் விசாரித்தனர். அப்போது எனது மகன் அஜித் வீட்டில் இருந்து பின்வாசல் வழியாக வெளியே ஓடினான். இதை பார்த்த அந்த வாலிபர்கள், அஜித்தை வெட்டிக் கொல்வோம் என மிரட்டி விட்டு சென்றதாக போலீசாரிடம் கூறினேன். எனது மூத்த மகனை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்தவர்கள் எனது இளைய மகனை கொன்று விட்டதாகவும் அவர்களிடம் தெரிவித்தேன்.

இந்தநிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேர் சென்னை தாம்பரம் கோர்ட்டில் சரண் அடைந்ததாக எனக்கு தெரிய வந்தது. இதற்கிடையே போலீசார் ஏதாவது ஒரு வழக்கில் எனது மூத்த மகன் அஜித் மற்றும் சிலரை சேர்க்க வேண்டும் என்று எனது முன்னிலையில் மிரட்டினார்கள்.

மேலும் விசாரணையின் போது என்னையும், எனது கணவரையும் தகாத வார்த்தைகளாலும், மகன் இறந்த துக்கத்தில் இருந்த என்னை பலர் முன்னிலையில் வெட்கப்படும்படியான வார்த்தைகளாலும் திட்டினர். உண்மை குற்றவாளிகளை கைது செய்யாமல், ஏற்கனவே மிகப்பெரிய இழப்பை தாங்கி கொள்ள முடியாத துயரத்தில் இருக்கும் எங்கள் குடும்பத்தை மேலும் கஷ்டப்படுத்தி வருகிறார்கள். எனவே உரிய நடவடிக்கை எடுத்து எனது மகனை கொன்ற உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

அண்ணனுக்கு பதிலாக தம்பியை தீர்த்து கட்டியிருக்கலாம் என்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட புகாரால், இரட்டை கொலை வழக்கில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story