சேதமான மின்மாற்றியை சீரமைக்கக் கோரி துணை மின் நிலையத்தை விவசாயிகள் முற்றுகை போலீசார் பேச்சுவார்த்தை


சேதமான மின்மாற்றியை சீரமைக்கக் கோரி துணை மின் நிலையத்தை விவசாயிகள் முற்றுகை போலீசார் பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 10 July 2019 10:45 PM GMT (Updated: 10 July 2019 4:56 PM GMT)

சேதமான மின்மாற்றியை சீரமைக்கக்கோரி துணை மின்நிலையத்தை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வாணாபுரம், 

வாணாபுரம் அருகே உள்ள மழுவம்பட்டில் மின்மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றி கடந்த சில வாரங்களுக்கு முன்பு பழுதானது. மேலும் அப்பகுதியில் மின் கம்பம் ஒன்றும் பாதகமான நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியில் மின்சாரம் வினியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மின்சாரம் கிடைக்காமல் பொதுமக்கள் தண்ணீருக்காகவும் மற்றும் விவசாய பாசனத்திற்காகவும் கடும் சிரமப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் சேதமான மின் கம்பம் மற்றும் மின்மாற்றியை சீரமைக்கக்கோரி அப்பகுதி விவசாயிகள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் முறையிட்டனர். பல முறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று காலை சுமார் 11 மணி அளவில் பெருந்துறைபட்டு துணை மின் நிலையம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த வாணாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, “கடந்த சில வாரங்களுக்கும் மேலாக மின்மாற்றியும், மின்கம்பமும் சீரமைக்கக்கோரி சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் பலமுறை புகார் தெரிவித்தோம். ஆனால் அதிகாரிகள் எந்த விதமான பதில்களையும் சரிவர கூறவில்லை என்றும், நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்றும் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

இதனையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரியிடம் தெரிவித்து உடனடியாக மின்மாற்றியை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன்பேரில் விவசாயிகள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story