காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க, கூடலூர்-முதுமலை எல்லையில் கும்கிகள் உதவியுடன் கண்காணிப்பு


காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க, கூடலூர்-முதுமலை எல்லையில் கும்கிகள் உதவியுடன் கண்காணிப்பு
x
தினத்தந்தி 11 July 2019 4:30 AM IST (Updated: 10 July 2019 11:48 PM IST)
t-max-icont-min-icon

காட்டு யானைகள் வருவதை தடுக்க கூடலூர்-முதுமலை எல்லையில் கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கூடலூர்,

கூடலூர் நகராட்சியும், முதுமலை புலிகள் காப்பக எல்லையும் இணையும் பகுதியில் தொரப்பள்ளி, குனில், புத்தூர்வயல், அள்ளூர்வயல் உள்பட பல கிராமங்கள் உள்ளது. கோடை காலத்தில் வறட்சியால் வனத்தில் புற்கள் கருகி விடுகிறது. பசுந்தீவன தட்டுப்பாட்டால் காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை தின்று அட்டகாசம் செய்து வருகிறது. தொடர்ந்து கோடை காலம் முடிவடையும் பட்சத்தில் பலாப்பழ சீசன் தொடங்கி விடுகிறது. இதனால் ஊருக்குள் வரும் காட்டு யானைகளின் வருகையும் குறைவது இல்லை.

இதனால் பொதுமக்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கூடலூர் தொரப்பள்ளி பஜார் மற்றும் குடியிருப்பு பகுதியில் பட்டப்பகலில் காட்டு யானைகள் வரத்து உள்ளது. மேலும் பொதுமக்களையும் தாக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.

கடந்த 7-ந் தேதி பால் கொண்டு சென்ற ஜீப்பை காட்டு யானை ஒன்று தாக்கி சாலையோரம் கவிழ்த்தது. இதனால் ஆவேசம் அடைந்த அப்பகுதி மக்கள் கூடலூர்- கர்நாடகா தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் மறியலில் ஈடுபட்டனர். மேலும் காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதைத்தொடர்ந்து ஆர்.டி.ஓ. ராஜ்குமார் தலைமையில் வருவாய், வனத்துறையினர் மற்றும் பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அப்போது காட்டு யானைகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இந்த நிலையில் காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு முகாமில் இருந்து ஜம்பு, வாசிம் என 2 கும்கி யானைகள் நேற்று தொரப்பள்ளிக்கு அழைத்து வரப்பட்டது.

காட்டு யானைகள் வருகிற சமயத்தில் கும்கி யானைகளை கொண்டு விரட்டியடிக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதனால் தொரப்பள்ளியில் கும்கி யானைகள் உதவியுடன் கண்காணிப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

ஊருக்குள் காட்டு யானைகள் நுழைவதை தடுக்க ஜம்பு, வாசிம் கும்கி யானைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. காட்டு யானைகள் வரும் சமயத்தில் விரட்டியடிக்கப்படும். அடுத்த கட்டமாக வனத்தின் கரையோரம் அகழி வெட்டப்படும்.

மேலும் சூரிய சக்தி மின்வேலி பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதுவரை கும்கி யானைகள் இப்பகுதியில் முகாமிட்டு இருக்கும். இவ்வாறு கூறினர்.

Next Story