தென்மேற்கு பருவமழை குறைவாக பெய்வதால், ஊட்டியில் முக்கிய அணைகளின் நீர்மட்டம் சரிவு


தென்மேற்கு பருவமழை குறைவாக பெய்வதால், ஊட்டியில் முக்கிய அணைகளின் நீர்மட்டம் சரிவு
x
தினத்தந்தி 11 July 2019 4:15 AM IST (Updated: 10 July 2019 11:49 PM IST)
t-max-icont-min-icon

தென்மேற்கு பருவமழை குறைவாக பெய்வதால் ஊட்டியில் முக்கிய அணைகளின் நீர்மட்டம் சரிந்து உள்ளது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். சுற்றுலா நகரமான ஊட்டிக்கு ஆண்டுதோறும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். மேலும் ஊட்டியில் 500-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் இயங்கி வருகிறது. ஊட்டியின் குடிநீர் தேவையை பல்வேறு அணைகள் பூர்த்தி செய்து வருகிறது.

ஊட்டி நகராட்சியில் பார்சன்ஸ்வேலி முதல் குடிநீர் திட்டம், 2-வது குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. பார்சன்ஸ்வேலி அணையில் இருந்து தினமும் 10 எம்.எல்.டி. (ஒரு எம்.எல்.டி.-பத்து லட்சம் லிட்டர்) தண்ணீர் எடுக்கப்படுகிறது. மற்ற 9 அணைகளில் இருந்து தினமும் 0.45 எம்.எல்.டி. தண்ணீர் எடுக்கப்பட்டு வினியோகிக்கப்படுகிறது. மேலும் பார்சன்ஸ்வேலி 3-வது குடிநீர் திட்டம் சோதனை அடிப்படையில் தண்ணீர் வெள்ளோட்டம் மூலம் 2 எம்.எல்.டி. குடிநீர் ஊட்டிக்கு கிடைக்கிறது.

குறிப்பாக பார்சன்ஸ்வேலி அணை, மார்லிமந்து அணை, டைகர்ஹில் அணை, தொட்டபெட்டா அப்பர் அணை, கோடப்பமந்து அப்பர் அணை உள்ளிட்ட அணைகளில் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளன.

வனப்பகுதிகளில் உற்பத்தியாகும் தண்ணீர் அணைகளில் சேகரமாகிறது. நடப்பாண்டில் ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் போதிய அளவு மழை பெய்யவில்லை. கடந்த ஜூன் மாதம் தொடங்கி பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை அவ்வப்போது மட்டுமே பெய்கிறது. குறைவாக பெய்து உள்ளதால், அணைகளில் நீர்மட்டம் வெகுவாக குறைய தொடங்கி உள்ளது. ஊட்டி நகரின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் பார்சன்ஸ்வேலி அணையில் மொத்த கொள்ளளவான 50 அடியில், 20 அடிக்கு நீர்மட்டம் உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு 18 அடியாக நீர்மட்டம் இருந்தது. தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் 2 அடி நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. மார்லிமந்து அணையில் 8 அடிக்கும், டைகர்ஹில் அணையில் 14 அடிக்கும், கோரிசோலா அணையில் 3 அடிக்கும் தண்ணீர் இருப்பு உள்ளது. டைகர்ஹில் அணையில் நீர்மட்டம் குறைந்து காணப்படுவதால், அங்குள்ள பாறைகள் மற்றும் மண் திட்டுகள் வெளியே தெரிந்தது.

தற்போது ஊட்டியில் உள்ள அணைகளில் இருக்கும் தண்ணீரை வருகிற செப்டம்பர் மாதம் இறுதி வரை வினியோகிக்க முடியும்.

அதனை தொடர்ந்து வடகிழக்கு பருவமழை தொடங்கும் போது, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இருக்காது என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story