குத்தாலம் பகுதியில் சாராயம் விற்ற சிறுவன் உள்பட 3 பேர் கைது


குத்தாலம் பகுதியில் சாராயம் விற்ற சிறுவன் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 10 July 2019 10:15 PM GMT (Updated: 10 July 2019 6:47 PM GMT)

குத்தாலம் பகுதியில் சாராயம் விற்ற சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

குத்தாலம்,

குத்தாலம் அருகே தேரழந்தூர் மகிமலை ஆற்றங்கரையில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார், மேற்கண்ட இடத்திற்கு சென்று கண்காணித்தனர்.

அங்கு சாராய விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் சுற்றி வளைத்தனர். அதில் ஒருவர் பிடிப்பட்டார். மற்றொருவர் தப்பி ஓடினார். உடனே போலீசார், பிடிப்பட்டவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.

கைது

இதில் பிடிப்பட்டவர் தேரழந்தூர் தென்பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் சுரேஷ் (வயது 25) என்பதும், தப்பியோடியவர் குத்தாலம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த காத்தமுத்து மகன் அண்ணாதுரை என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தனர். வழக்கு தொடர்பாக தப்பியோடிய அண்ணாதுரையை தேடி வருகின்றனர்.

இதேபோல் குத்தாலம் அருகே திருவாவடுதுறை மாம்புள்ளி கிராமத்தில் சாராயம் விற்ற மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த 18 வயது சிறுவனை குத்தாலம் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்து 55 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

மயிலாடுதுறை அருகே கோடங்குடி கோணயாம் பட்டினம் கடலாழி ஆற்றங்கரையில் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த மகாலிங்கம் மகன் இளையராஜா (31) என்பவரை பெரம்பூர் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. 

Next Story