பா.ஜனதாவை கண்டித்து ராஜ்பவனை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) தலைவர்கள் கைது நடவடிக்கையால் பரபரப்பு


பா.ஜனதாவை கண்டித்து ராஜ்பவனை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) தலைவர்கள் கைது நடவடிக்கையால் பரபரப்பு
x
தினத்தந்தி 11 July 2019 4:00 AM IST (Updated: 11 July 2019 12:19 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதாவை கண்டித்து ராஜ்பவனை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பெங்களூரு, 

பா.ஜனதாவை கண்டித்து ராஜ்பவனை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் சேர்ந்து கூட்டணி அமைத்து ஆட்சி நடத்துகின்றன. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்களும், ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்துள்ளனர்.

அதேபோல் மந்திரிகளாக இருந்த 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் தங்களின் மந்திரி பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, கூட்டணி ஆட்சிக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் பெற்று சென்றுள்ளனர்.

முற்றுகையிட முயற்சி

இந்த நிலையில், பா.ஜனதா கட்சியினர் குதிரைபேரத்தில் ஈடுபட்டு காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சி எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைத்ததாக குற்றம்சாட்டி காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) தலைவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பெங்களூரு கப்பன்பார்க் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) தலைவர்கள், தொண்டர்கள் ராஜ்பவன் (கவர்னர் மாளிகை) நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர்.

இந்த ஊர்வலத்தில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா, முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, காங்கிரஸ் மூத்த தலைவர்களான குலாம்நபி ஆசாத், மல்லிகார்ஜூன கார்கே, கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால், கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் பா.ஜனதாவின் குதிரைபேரத்தை கண்டித்து பேசினர். தொண்டர்கள் பா.ஜனதாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

கைது

ராஜ்பவனை நெருங்கிய நிலையில் அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இரும்பு தடுப்பு வேலிகள் அமைத்து தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து ஊர்வலத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கைது செய்யப்பட்டு போலீஸ் வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டனர். இந்த சம்பவம் நேற்று பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story