ஆறுகளில் செடிகள் அகற்றப்பட்டு கரைகள் பலப்படுத்தப்படுமா? தஞ்சை விவசாயிகள் எதிர்பார்ப்பு


ஆறுகளில் செடிகள் அகற்றப்பட்டு கரைகள் பலப்படுத்தப்படுமா? தஞ்சை விவசாயிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 11 July 2019 4:00 AM IST (Updated: 11 July 2019 12:30 AM IST)
t-max-icont-min-icon

ஆறுகளில் செடிகள் அகற்றப்பட்டு கரைகள் பலப்படுத்தப் படுமா? என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

தஞ்சாவூர்,

தமிழகத்தை ஆண்ட மன்னர்கள் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கினார்கள். மன்னர்கள் தங்கள் நாட்டு மக்களின் தேவைக்காக தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான ஏரிகளை வெட்டினர். அந்த காலகட்டத்திலேயே பொறியியல் முறைப்படி ஒரு ஏரியில் தண்ணீர் 95 சதவீதத்தை தொட்டுவிட்டால் அந்த ஏரியில் உள்ள உபரிநீர் போக்கி மூலம் அடுத்த ஏரிக்கு தண்ணீர் செல்லும் வகையில் ஏரிகளை வடிவமைத்தனர்.

அதுமட்டுமின்றி சமவெளிப்பகுதியில் பெய்யும் மழைநீர் வீணாகாமல் ஏரிகளில் சேகரிக்கும் வகையில் வரத்து வாய்க்கால்களையும் முறையாக அமைத்தனர். அந்த அமைப்பின் காரணமாக பெரும் மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்படாமலும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், மழை பெய்யாத காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமலும் மக்களை காத்தனர். ஆனால் இவற்றில் ஒரு சில ஏரிகளை தவிர மற்ற ஏரிகள் எல்லாம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டிடங்களாக காட்சி அளிக்கின்றன.

தஞ்சை-திருச்சி மாவட்ட எல்லையில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த கல்லணை உள்ளது. கரிகால்சோழனால் கட்டப்பட்ட கல்லணை உலகின் மிகப் பழமையான நீர் மேலாண்மை திட்டமாகும். இந்த அணை காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. காவிரி ஆறு கல்லணையை வந்தடைந்த பிறகு கொள்ளிடம், காவிரி, வெண்ணாறு, புது ஆறு என்கிற கல்லணைக்கால்வாய் என பிரிகிறது. பாசன காலங்களில் காவிரி, வெண்ணாறு, புதுஆறு ஆகியவற்றிலும், வெள்ளக்காலங்களில் கொள்ளிடத்திலும் கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும்.

புதுஆற்றுக்கும் மற்ற ஆறுகளுக்கும் சில அடிப்படையான வேறுபாடுகள் உள்ளன. மற்ற ஆறுகள் இயற்கையாக அமைந்தவை. புதுஆறு மனிதனால் வெட்டப்பட்டது. காவிரி டெல்டா மாவட்டங்களில் காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய், கொள்ளிடம், குடமுருட்டி, அரசலாறு, வெட்டாறு என பெரிய ஆறுகள், கிளை ஆறுகள் என 36 ஆறுகள் உள்ளன. இந்த ஆறுகளில் இருந்து பிரியும் பாசன வாய்க்கால்கள் ஏ பிரிவு வாய்க்கால்கள் 1,665, பி பிரிவு, சி, பிரிவு, டி, பிரிவு, ஈ பிரிவு, எப் பிரிவு, ஜி பிரிவு வாய்க்கால்கள் என 28 ஆயிரத்து 500 வாய்க்கால்கள் உள்ளன.

இந்த ஆறுகள், கால்வாய்கள் தூர்வாரப்பட்டு பல ஆண்டுகள் ஆகி விட்டன. பாசன வாய்க்கால் கள் தூர்வார ஆண்டு தோறும் நிதி ஒதுக்கப்படுகிறது. அதுவும் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதற்கு ஓரிரு வாரங்களுக்கு முன்பே நிதி ஒதுக்கப்படுவதால் பணிகள் நிறைவு பெறாமலே போய் விடுகின்றன. இதன் காரணமாக பாசனத்திற்கும், குளங்களுக்கும் தண்ணீர் சரிவர கொண்டு சென்று சேர்க்க முடியாமல் போய் விடுகிறது. இதனால் கடந்த ஆண்டு ஆறுகளில் தண்ணீர் திறந்துவிடப்பட்டாலும் கடைமடை பகுதிகளில் தண்ணீர் முழுமையாக சென்று சேரவில்லை.

இந்த குடிமராமத்து பணிக்காக தமிழகஅரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வாய்க்கால்கள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. புதுஆற்றில் பல இடங்களில் கரைகள் உடைந்த நிலையில் காணப்படுகிறது. கடந்த ஆண்டு பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு வயல்களுக்குள் தண்ணீர் சென்றது. இந்த ஆண்டாவது கரைகள் சீரமைக்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால் இதுவரை கரைகளை பலப்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கல்லணைக்கால்வாய் எனப்படும் புதுஆற்றில் ஆங்காங்கே மண் மேடாக காட்சி அளிக்கிறது. அதில் புற்களும், செடிகளும் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் தண்ணீர் வரும் காலங்களில் தங்கு தடையின்றி செல்வதில் சிரமம் ஏற்படும். இதனால் புற்கள், செடிகளை அகற்றி கரைகளை பலப்படுத்த வேண்டும். தஞ்சை வெண்ணாற்றிலும் முட்செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. பள்ளியக்கிரஹாரம் அருகே கட்டப்பட்ட தடுப்பணையின் ஒரு பகுதி உடைந்துள்ளது. மணலும் நிரம்பி காணப்படுகிறது. இதனால் தண்ணீர் தேக்கி வைக்க முடியாத அளவுக்கு தடுப்பணை காட்சி அளிக்கிறது. வெட்டாற்றில் மணல் திட்டுகள் அகற்றப்படாமல் இருப்பதால் தண்ணீர் திறந்துவிடப்படும்போது வயல்களுக்குள் தண்ணீர் செல்ல வாய்ப்பு உள்ளது.

எனவே ஆறுகளில் முட்செடிகள், மணல் திட்டுக்களை அகற்ற வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும். வடவாற்றில் ஆகாய தாமரைகள் வளர்ந்து காணப்படுகிறது. மேலும் கழிவுநீரும் கலக்கிறது. ஆகாய தாமரையை அகற்றி கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்.

இது குறித்து விவசாயிகள் கூறும்போது? தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இது தவிர கோடை நெல் சாகுபடி நடைபெறும். இந்த பாசனத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்படும்.

இந்த ஆண்டு 8-வது ஆண்டாக குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. பல ஆண்டுகளாக தூர்வாரும் பணி முழுமையாக நடைபெறவில்லை. இந்த ஆண்டு ஏரி, குளங்களை தூர்வாருவதுடன் வாய்க்கால்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை எல்லாம் அகற்றி வயல்களுக்கு தண்ணீர் தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆறுகளும் மேடாகி கொண்டே வருகிறது. இதனால் ஆறுகளின் அகலம் குறைகிறது. அகலமாக காணப்பட்ட ஆறுகள் சில இடங்களில் கால்வாய் போல் காட்சி அளிக்கிறது. எனவே மணல் மேடுகளை அகற்றி, செடி, முட்புதர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றனர்.

Next Story