மின்வாரிய அலுவலகம் முன்பு மின்கம்பத்தை அகற்றக்கோரி வாலிபர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் சேலத்தில் பரபரப்பு
சேலத்தில் மின்கம்பத்தை அகற்றக்கோரி மின்வாரிய அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்,
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட 5-வது வார்டு பெரியபுதூர் பகுதியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும் மின்கம்பம் உள்ளது. அதே பகுதியில் உள்ள போயர் தெருவில் குறைந்தளவு மின்சாரம் செல்லக்கூடிய ஒரு முனை மின் இணைப்பு (சிங்கிள் பீஸ்) மூலம் மின்சார வினியோகம் செய்யப்படுகிறது.
இதனால் டி.வி., மிக்சி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதடைவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து மின்சார வாரிய அலுவலகத்தில் பலமுறை புகார் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மின்வாரிய அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வடக்கு மாநகர தலைவர் கதிர்வேல் தலைமையில் 50-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று மின்வாரிய அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் அங்கு அமர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள், மக்களுக்கு இடையூறாக உள்ள மின்கம்பத்தை மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய வாசகங்களை அட்டையில் எழுதி வைத்தனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் அழகாபுரம் போலீசார், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மின்கம்பத்தை உடனடியாக அகற்றப்படும் என்று அவர்களிடம் அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story