நீலகண்டபுரம் ரெயில்வே கீழ்ப்பாலம் கட்டும் பணிகள் தாமதம் கிராம மக்கள் அவதி


நீலகண்டபுரம் ரெயில்வே கீழ்ப்பாலம் கட்டும் பணிகள் தாமதம் கிராம மக்கள் அவதி
x
தினத்தந்தி 10 July 2019 10:30 PM GMT (Updated: 10 July 2019 7:03 PM GMT)

நீலகண்டபுரம் ரெயில்வே கீழ்ப்பாலம் கட்டும் பணிகள் தாமதமாக நடப்பதால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

பேராவூரணி,

தஞ்சை மாவட்டம் பேராவூரணி புதிய பஸ் நிலையம் அருகே நீலகண்டபுரம் செல்லும் சாலையில் ரெயில்வே கேட் உள்ளது. 121 ஆண்டுகள் பழமை வாய்ந்த ரெயில்வே கேட்டை கழனிவாசல், கொரட்டூர், சோழகனார்வயல், ஆதனூர், மணக்காடு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்கள் போக்குவரத்துக்காக பயன்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் திருவாரூர்-காரைக்குடி அகல ரெயில் பாதை பணிக்காக நீலகண்டபுரம் ரெயில்வே கேட் மூடப்பட்டது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து கிராம மக்களின் போக்குவரத்துக்காக ரெயில்வே கேட்டுக்கு பதிலாக கீழ்ப்பாலம் அமைக்க ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்ட னர். அதன்படி கடந்த ஆண்டு (2018) ஆகஸ்டு மாதம் கீழ்ப்பாலம் கட்டும் பணிகள் தொடங்கின.

பணிகள் தாமதம்

இந்த பணிகள் இதுவரை முடிவடையவில்லை. கீழ்ப்பாலம் அமைக்கும் பணிகளில் தாமதம் ஏற்பட்டு வருவதால் கழனிவாசல், கொரட்டூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் அந்த கிராமங்களுக்கு செல்வதிலும் சிரமம் ஏற்பட்டு உள்ளது. இதனால் கிராம மக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

மழை காலம் தொடங்கினால் பணிகளை முடிப்பதில் மேலும் தாமதம் ஏற்படும். எனவே கீழ்ப்பாலம் கட்டும் பணிகளை மழை காலத்துக்கு முன்பாக விரைந்து முடிக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இது குறித்து அப்பகுதியை சேர்ந்த வக்கீல் மோகன் கூறியதாவது:-

கீழ்ப்பாலம் கட்டும் பணிகள் தொடங்கி ஒரு ஆண்டு ஆகப்போகிறது. இன்னும் பணிகள் முடியவில்லை. பணிகளை தாமதப்படுத்தி வருகிறார்கள். இதனால் இந்த பாதையை போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளோம். இதே பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு செல்வதற்கு கூட சிரமமாக உள்ளது. எனவே ரெயில்வே அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு கீழ்ப்பாலம் கட்டும் பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story