அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட மாறுதல் மாணவர்கள், பெற்றோர்கள் கதறி அழுதனர்


அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட மாறுதல் மாணவர்கள், பெற்றோர்கள் கதறி அழுதனர்
x
தினத்தந்தி 11 July 2019 4:30 AM IST (Updated: 11 July 2019 12:48 AM IST)
t-max-icont-min-icon

மாங்குடி அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட மாறுதலாகி செல்வதால் மாணவர்கள், பெற்றோர்கள் கதறி அழுதனர்.

கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள மாங்குடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றவர் ஜோதிமணி. இவர் பொறுப்பு ஏற்ற பிறகு பள்ளி வகுப்பறைகளில் தூய குடிதண்ணீர் குழாய், தபால் பெட்டி, ஒவ்வொரு வகுப்பிலும் கணினி, தினசரி செய்தி தாள்கள், விளையாட்டு அரங்கம், 3 முதல் 8-ம் வகுப்பு வரை ஏ.சி. அறைகள் இப்படி பல்வேறு பணிகளை சிறப்பாக பல ஆண்டுகளாக செய்து வந்துள்ளார். மேலும் மாணவர்களுக்கு தையல், வயர் கூடை பின்ன தொழில் பயிற்சி ஆசிரியர்கள், கைரேகை பதிவு உள்ளிட்டவற்றை பள்ளியில் செய்து புதுமைப்படுத்தினார்.

அதாவது அரசு எப்படி பள்ளிகளை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்று திட்டங்கள் வகுத்து வருகிறதோ, அந்த திட்டங்களை பல வருடங்களாக இந்த பள்ளியில் செய்து காட்டிவிட்டார். இதனால் கடந்த ஆண்டு தமிழக அரசின் முதல் புதுமை பள்ளி விருது விண்ணப்பம் கூட செய்யாத நிலையில் கல்வித்துறையின் பரிந்துறையில் தமிழக முதல்-அமைச்சர் வழங்கினார். மேலும் மாங்குடி அரசு பள்ளி பல்வேறு விருதுகள் பெற தலைமை ஆசிரியர் ஜோதிமணி மற்றும் பாட ஆசிரியர்கள் துணையாக இருந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நடந்த நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் மாங்குடி பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிமணி பச்சலூர் அரசு பள்ளிக்கு பணியிட மாறுதல் பெற்றார். நேற்று காலை பணியிட மாறுதல் ஆணையுடன் மாங்குடி அரசு பள்ளிக்கு தலைமை ஆசிரியர் ஜோதிமணி வரும் முன்பே மாணவர்களின் பெற்றோர்களும் பள்ளிக்கு வந்துவிட்டனர். கூட்ட அரங்கில் மாணவர்களை அழைத்து தான் பணியிட மாறுதல் பெற்று செல்வதாக கூறிய போது மொத்த மாணவ, மாணவிகளும் போக கூடாது என்று கதறி அழுதனர். அவர்கள் கதறி அழுவதை பார்த்து தலைமை ஆசிரியரும், சக ஆசிரியர்கள், பெற்றோர்களும் அழுதனர்.

அதை தொடர்ந்து பேசிய தலைமை ஆசிரியர் ஜோதிமணி, அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். ஆனால் அந்த இனிப்பை மாணவர்கள் சாப்பிடாமல் அழுதனர். பின்னர் பள்ளி வளாகத்தைவிட்டு வெளியே வந்த தலைமை ஆசிரியர் தரையில் விழுந்து பள்ளியை வணங்கி சென்றார்.

பெற்றோர்கள் கூறுகையில், மாங்குடி என்ற இந்த கிராமத்தை உலக அளவில் தெரியப்படுத்தியவர் தலைமை ஆசிரியர் ஜோதிமணி தான். அவர் வந்த பிறகே எங்கள் குழந்தைகள் படிப்பதுடன் ஒழுக்கத்துடன் இருக்கிறார்கள். அப்படியான தலைமை ஆசிரியரை இழக்க விரும்பவில்லை. இப்பள்ளி உயர்நிலை பள்ளியாக தரம் உயர போகிறது. இதனால் இடம் மாறுகிறார் என்று சொல்கிறார்கள். எங்களுக்கு அவர்தான் வேண்டும். எனவே மீண்டும் தலைமை ஆசிரியர் ஜோதிமணி எங்கள் ஊரிலேயே பணியை தொடர வேண்டும். இல்லை என்றால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்றனர்.

Next Story