ஏர்வாடி அருகே கொலை செய்யப்பட்ட கட்டிட தொழிலாளியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு


ஏர்வாடி அருகே கொலை செய்யப்பட்ட கட்டிட தொழிலாளியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 11 July 2019 4:45 AM IST (Updated: 11 July 2019 1:07 AM IST)
t-max-icont-min-icon

ஏர்வாடி அருகே கொலை செய்யப்பட்ட கட்டிட தொழிலாளியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கைதான 3 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை, 

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே கோதைசேரியை சேர்ந்த ஆறுமுகபெருமாள் மகன் செல்வக்குமார் (வயது 29). கட்டிட தொழிலாளியான இவர் களக்காடு ஒன்றிய சமத்துவ மக்கள் கட்சி மாணவரணி துணைச்செயலாளராக இருந்தார். இவரை கடந்த 8-ந் தேதி ஒரு கும்பல் ஓட, ஓட விரட்டி சென்று வெட்டிக்கொலை செய்தது. அதேபோல் நாங்குநேரி பெரும்பத்தை சேர்ந்த நாங்குநேரி ஒன்றிய தி.மு.க. செயலாளர் காமராஜையும் அதே கும்பல் வெட்டியது.

இதில் பலத்த காயம் அடைந்த காமராஜ் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே கும்பல் இளந்தோப்பு கிராமத்துக்கு சென்றது. அங்கு விவசாயி கனகராஜின் மகன் செல்வக்குமாரின் வீட்டை அடித்து நொறுக்கியது.

கொலை மற்றும் தாக்குதல் சம்பவத்தால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது. சம்பவ இடத்துக்கு நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். செல்வக்குமார் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் கோதைசேரி விலக்கில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த தொடர் தாக்குதல் சம்பவம் குறித்து ஏர்வாடி, நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை போலீசார் அதிரடி விசாரணை நடத்தி கொலை தொடர்பாக மஞ்சங்குளத்தை சேர்ந்த சுந்தரபாண்டியன் மகன் சாமித்துரை (24), சுடலைகண்ணு மகன் சுப்பையா (25), ராமர் (25) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு டோனாவூர் அருகில் உள்ள கீழ்மலையசேரி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் கட்டிட வேலை செய்யும்போது சாமித்துரை தரப்பினருக்கும், செல்வக்குமார் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதை காமராஜ் சமரசம் செய்து வைத்துள்ளார். இந்த முன்விரோதம் காரணமாக செல்வக்குமார் கொலை செய்யப்பட்டதும், காமராசுக்கு அரிவாள் வெட்டு விழுந்ததும் தெரியவந்தது. இருந்தபோதும் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என 3 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதற்கிடையே, செல்வக்குமார் உடல் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

அப்போது அவரது உடலுக்கு நெல்லை தட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன், செயலாளர் சண்முகவேல், பொருளாளர் செல்வராஜ், ஆட்சி மன்ற குழு தலைவர் கணேசன், ராதாபுரம்-நாங்குநேரி நாடார் மகாஜன சங்க தலைவர் எட்விட் ஜோஸ், பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார் மற்றும் நிர்வாகிகள் செல்வக்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவர்கள், செல்வக்குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

அப்போது தட்சணமாற நாடார் சங்க செயலாளர் சண்முகவேல் கூறும்போது, “கடந்த 8-ந் தேதி செல்வக்குமாரை ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இந்த சம்பவத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கொலையில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். அவரது குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். செல்வக்குமார் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும் என கலெக்டர் ஷில்பாவிடம் கோரிக்கை வைத்தோம். அவர் நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார். அதன் அடிப்படையில் செல்வக்குமாரின் உடலை பெற்றுக் கொள்கிறோம்” என்றார்.

தொடர்ந்து செல்வக்குமார் உடல் சொந்த ஊரான கோதைசேரிக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

Next Story