எட்டயபுரம் அருகே மொபட்டில் சென்ற மாணவியிடம் நகை பறித்த மீன் வியாபாரி கைது


எட்டயபுரம் அருகே மொபட்டில் சென்ற மாணவியிடம் நகை பறித்த மீன் வியாபாரி கைது
x
தினத்தந்தி 11 July 2019 4:00 AM IST (Updated: 11 July 2019 1:19 AM IST)
t-max-icont-min-icon

எட்டயபுரம் அருகே மொபட்டில் சென்ற மாணவியிடம் நகை பறித்த மீன் வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

எட்டயபுரம், 

எட்டயபுரம் அருகே சாத்தூரப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த 16 வயதான மாணவி, எட்டயபுரத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவர் நேற்று காலையில் வழக்கம்போல் பள்ளிக்கூடத்துக்கு மொபட்டில் புறப்பட்டு சென்றார். சாத்தூரப்பநாயக்கன்பட்டியை கடந்து சென்றபோது, அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் திடீரென்று மொபட்டின் பின்புறமாக மோட்டார் சைக்கிளை மோத விட்டார்.

இதனால் மொபட்டில் இருந்து மாணவி நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது அந்த வாலிபர், மாணவியின் கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு, மோட்டார் சைக்கிளில் வந்த வழியிலேயே திரும்பி தப்பிச் சென்றார்.

இதுகுறித்து மாணவி செல்போனில் தனது பெற்றோரிடம் தெரிவித்தார். உடனே சாத்தூரப்பநாயக்கன்பட்டியில் தயாராக இருந்த பொதுமக்கள், அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை கையும் களவுமாக பிடித்து தர்ம அடி கொடுத்து நகையை மீட்டனர். பின்னர் அவரை எட்டயபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசாரின் விசாரணையில், அந்த வாலிபர் ஸ்ரீவைகுண்டம் தாலுகா மீனாட்சிபுரம் அடைக்கலாபுரத்தை சேர்ந்த ராஜ்பால் மகன் மீன் வியாபாரியான அசோக் (வயது 33) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

Next Story