மெஞ்ஞானபுரம் அருகே கிராம மக்கள் சாலைமறியல் பகுதிநேர ரேஷன் கடை அமைக்க கோரிக்கை
மெஞ்ஞானபுரம் அருகே பகுதிநேர ரேஷன் கடை அமைக்க வலியுறுத்தி, கிராம மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மெஞ்ஞானபுரம்,
மெஞ்ஞானபுரம் அருகே தாய்விளை கிராம மக்கள், சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தோப்பூர் ரேஷன் கடையில் சென்று, அத்தியாவசிய பொருட்களை வாங்கி வருகின்றனர். இதனால் பெண்கள், முதியவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
எனவே தாய்விளையில் பகுதிநேர ரேஷன் கடை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் நேற்று காலையில் அங்குள்ள மெயின் ரோட்டில் அமர்ந்து திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் மெஞ்ஞானபுரம்-நாசரேத் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், சாத்தான்குளம் தாசில்தார் ஞானராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சிவசங்கர் (மெஞ்ஞானபுரம் பொறுப்பு), சகாய சாந்தி (நாசரேத்), சப்-இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது தாய்விளையில் பகுதிநேர ரேஷன் கடை அமைக்க ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story