அரியலூர் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டப்பணிகளுக்கு ரூ.2½ கோடி ஒதுக்கீடு கலெக்டர் டி.ஜி.வினய் தகவல்


அரியலூர் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டப்பணிகளுக்கு ரூ.2½ கோடி ஒதுக்கீடு கலெக்டர் டி.ஜி.வினய் தகவல்
x
தினத்தந்தி 10 July 2019 11:00 PM GMT (Updated: 10 July 2019 8:11 PM GMT)

அரியலூர் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டப்பணிகளுக்கு ரூ.2½ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறை மருதையாறு வடி நிலக்கோட்டம் சார்பில் முதல்–அமைச்சரின் குடிமாமரத்து பணிகளுக்கான அரியலூர் மாவட்ட பாசனதாரர்கள் சங்க உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. இதற்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–

தமிழக முதல்–அமைச்சரின் குடிமராமத்து திட்டம் 2019–20 ஆண்டிற்கான பணிகளுக்கு அரசு ஒப்புதல் அளிக்கப்பட்டு, அரியலூர் மாவட்டத்தில் மருதையாறு வடிநில கோட்டம் அரியலூர் மூலம் அயன் ஆத்தூர் உடையான் ஏரிக்கு ரூ.15 லட்சமும், அயன் ஆத்தூர் பெரிய ஏரிக்கு ரூ.24 லட்சமும், விளாங்குடி ஓடை அணைக்கட்டுக்கு ரூ.29 லட்சத்து 50 ஆயிரமும், பொய்யூர் கல்லார் ஓடை அணைக்கட்டுக்கு ரூ.29 லட்சத்து 50 ஆயிரமும் குடிமாமரத்து பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேபோல கல்லக்குடி பெரிய ஏரிக்கு ரூ.25 லட்சமும், அருங்கால் ஓடை அணைக்கட்டுக்கு ரூ.18 லட்சமும், மல்லூர் நைனேரிக்கு ரூ.20 லட்சமும், மல்லூர் மணிவாசகர் ஓடை அணைக்கட்டுக்கு ரூ.12 லட்சமும், குருவாலப்பர் கோவில் பொன்னேரிக்கு ரூ.20 லட்சமும், சித்தமல்லி அணைக்கு ரூ.28 லட்சமும் குடிமாமரத்து பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 10 குடிமாமரத்து பணிகளுக்கு ரூ.2 கோடியே 21 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றில் தற்போது 9 பாசனதாரர்கள் சங்கம் அமைக்கப்பட்டு 9 பணிகள் தொடங்கப்பட்டு, கரைகள் பலப்படுத்துதல், சட்டர் பழுதுபார்த்தல் போன்ற புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும், அரியலூர் மாவட்டத்தில் ஆற்றுப்பாதுகாப்பு கோட்டம் திருச்சி மூலம் புள்ளம்பாடி பிரதான கால்வாய்கள் குடிமாமரத்து பணிகளுக்கு 10.6 கிலோ மீட்டர் வரைக்கு ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெறவுள்ளது. இப்பணிகள் யாவும் அந்தந்த பாசனதாரர்கள் சங்கம் மூலமே நிறைவேற்றப்பட வேண்டும். மேலும், அரசு வழிகாட்டியுள்ள நெறிமுறைகளை பின்பற்றி பணிகள் தரமாக செய்யப்பட வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொறுப்பேற்க நேரிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி, திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தர்ராஜன், செயற்பொறியாளர் (பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறை) தட்சணாமூர்த்தி, உதவி செயற்பொறியாளர்கள் சாந்தி, வேல்முருகன், வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) பழனிசாமி, வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர்கள், நில அளவைத்துறை அலுவலர், பதிவுத்துறை மற்றும் மாவட்ட பாசனதாரர்கள் சங்கத்தினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


Next Story