அன்னவாசல் அருகே குளத்தை தூர்வாரும் பணியில் இளைஞர்கள்


அன்னவாசல் அருகே குளத்தை தூர்வாரும் பணியில் இளைஞர்கள்
x
தினத்தந்தி 11 July 2019 4:15 AM IST (Updated: 11 July 2019 1:52 AM IST)
t-max-icont-min-icon

அன்னவாசல் அருகே குளத்தை தூர்வாரும் பணியில் இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அன்னவாசல்,

தண்ணீர் தட்டுப்பாடு, தமிழகத்தை உலுக்கும் நிலையில், நீர்நிலைகளை மேம்படுத்த, இனி அரசை எதிர்பார்க்காமல், ஆங்காங்கே பொதுமக்கள், தன்னார்வ அமைப்புக்கள், நலச்சங்கங்கள் களம் இறங்கி வருகின்றன. இந்த வரிசையில், அன்னவாசலில் இளைஞர்கள் ஒன்றிணைந்து அப்பகுதியில் உள்ள குளத்தை தூர்வாரும் பணியில் களம் இறங்கி உள்ளனர். அன்னவாசலில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்ட போது எம்.ஜி.ஆர். நேரடியாக சென்று இந்த குளத்தை பார்வையிட்டு அப்பொழுதே இக்குளத்தில் கிணறு வெட்டி பொதுமக்கள் தாகம் தீர்க்க வழிவகை செய்தார்.

இந்த குளத்தில் அன்னவாசல் சுற்று வட்டார பொதுமக்கள் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், தெரு குழாய் தண்ணீர் வந்த பிறகு பொதுமக்கள் இந்த குளத்தை பயன் படுத்துவதை மறந்தனர். பின்னர் இந்த குளமானது தற்போது, தண்ணீரின்றி வறண்டு செடிகள், புதருகள் மண்டி கிடந்தன. இதனால், சுற்றுப்புற பகுதிகளில், நிலத்தடி நீர்மட்டம் சரிந்தது. இதனால், மழைநீர் சேமிப்பின் மகத்துவத்தை புரிந்து கொண்ட, அன்னவாசல் அக்னி சிறகு மற்றும் புவி அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் புது குளத்தை பொக்லைன் எந்திரம் மூலம் தூர்வாரி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இளைஞர்கள் ஒன்றிணைந்து...

இதுகுறித்து அக்னி சிறகு இளைஞர் எடிசன் கூறியதாவது:-

ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளம் கருவேல மரங்கள், செடி, கொடிகள் மண்டி அசுத்தமாக கிடந்தது. இந்த குளத்தை பொதுமக்கள் மீண்டும் பயன்படுத்தும் வண்ணம் இளைஞர்கள் ஒன்றிணைந்து இந்த குளத்தை சுத்தப்படுத்தி வருகின்றோம். இதற்கு உண்டான செலவை ஈடுகட்ட அடுத்த மாதம் நடைபெற உள்ள எலிசபெத் ஆலய திருவிழாவில் ஆடல், பாடல் இசை நிகழ்ச்சியை ரத்து செய்து அந்த பணத்தில் இந்த குளத்தை சுத்தப்படுத்தி வருகிறோம். இதன்பின்னர் குளத்தை சுற்றி மரம் நடப்படும் என்றார்.

Next Story