மண்ணச்சநல்லூர் அருகே சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய கிராம மக்கள் தரமாக அமைக்க கோரிக்கை


மண்ணச்சநல்லூர் அருகே சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய கிராம மக்கள் தரமாக அமைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 11 July 2019 4:15 AM IST (Updated: 11 July 2019 2:24 AM IST)
t-max-icont-min-icon

தரமாக அமைக்கக்கோரி மண்ணச்சநல்லூர் அருகே கிராம மக்கள் சாலைப்பணியை தடுத்து நிறுத்தினர்.

சமயபுரம்,

மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம், சா.அய்யம்பாளையம் ஊராட்சிக்குட்பட்டது, ஆராயிபள்ளம் கிராமம். சா.அய்யம்பாளையம் முதல் ஆராயிபள்ளம் வரை உள்ள சாலை குண்டும்-குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருந்தது. இந்த சாலையை சீரமைக்க பொது மக்கள் விடுத்த கோரிக்கையின்பேரில், ரூ.46 லட்சத்து 64 ஆயிரம் மதிப்பீட்டில் சாலை அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்தசாலை தரமற்ற முறையில் அமைக்கப்படுவதாகவும், இரு சக்கர வாகனங்கள் செல்லும்போது சிறிய ஜல்லிகள் பெயர்ந்து விடுவதாகவும், இவ்வாறு அமைக்கப்பட்டால் ஒரு மாதத்திற்கு கூட சாலை தாங்காது என்றும், ஆகவே, இந்த சாலையை தரமாக அமைக்கக்கோரியும் அப்பகுதி பொதுமக்கள் ஒப்பந்ததாரரிடம் கேட்டுக்கொண்டனர். ஆனாலும், தொடர்ந்து தரமற்ற முறையில் சாலை அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஒன்றிய ஆணையர் மற்றும் பொறியாளர் உள்ளிட்டோரிடம் சொல்லியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலை திடீரென ஒன்று கூடி சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் மற்றும் ஒன்றிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தரமான முறையில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து அனை வரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story