கச்சிராயப்பாளையம் அருகே, குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்
கச்சிராயப்பாளையம் அருகே குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கச்சிராயப்பாளையம்,
கச்சிராயப்பாளையம் அருகே பால்ராம்பட்டு கிராமத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் தேவைக்காக அதே பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றி குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த ஒருவர், ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்ட இடத்துக்கு அருகே புதிதாக கிணறு வெட்டி, பக்கவாட்டு ஆழ்துளை கிணறு அமைத்து, ஏற்கனவே அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் உறிஞ்சியதாக தெரிகிறது. இதனால் கிராம மக்களுக்கு சரியான முறையில் குடிநீர் கிடைக்காததால் அவர்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் அவர்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் பக்கவாட்டு ஆழ்துளை கிணறை மூடக்கோரியும் முறையாக குடிநீர் வழங்கக்கோரியும் கச்சிராயப்பாளையம்-பால்ராம்பட்டு சாலையில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர் ராமதாஸ், ஊராட்சி ஒன்றிய பொறியாளர் அருண், கச்சிராயப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டபவர்களிடம பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையேற்ற கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story