சுத்தப்படுத்தும் பணிக்காக கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி இறப்போர் தமிழகத்தில் அதிகம் - தேசிய துப்புரவு மறுவாழ்வு ஆணைய உறுப்பினர் தகவல்


சுத்தப்படுத்தும் பணிக்காக கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி இறப்போர் தமிழகத்தில் அதிகம் - தேசிய துப்புரவு மறுவாழ்வு ஆணைய உறுப்பினர் தகவல்
x
தினத்தந்தி 11 July 2019 4:15 AM IST (Updated: 11 July 2019 2:30 AM IST)
t-max-icont-min-icon

சுத்தப்படுத்தும் பணிக்காக கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி இறப்போர் தமிழகத்தில் அதிகம் என்று தேசிய துப்புரவு மறுவாழ்வு ஆணைய உறுப்பினர் ஜெகதீ‌‌ஷ் ஹிர்மானி கூறினார்.

திருப்பூர், 

திருப்பூர் மாவட்டத்தில் சுகாதார தொழிலாளர்களின் பணிகள் மற்றும் அவரை சார்ந்து வாழும் குடும்பத்தினரின் சமூக பொருளாதார நிலை, வாழ்வியல் சூழ்நிலை, கல்வி நிலை தொடர்பான அனைத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நேற்று மாலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு தேசிய துப்புரவு மறுவாழ்வு ஆணைய உறுப்பினர் ஜெகதீ‌‌ஷ் ஹிர்மானி தலைமை தாங்கி பேசியதாவது:-

உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு தேவையான அடிப்படை பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளதை உறுதி செய்ய வேண்டும். நிரந்தர தொழிலாளர்கள் மற்றும் தற்காலிக தொழிலாளர்கள் காப்பீட்டு திட்டத்தில் இணைந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும். செப்டிக் டேங்க், கழிவுநீர் தொட்டிகளை நவீன எந்திரங்களை பயன்படுத்தி துப்புரவு செய்ய வேண்டும். மனிதர்களை இறங்கி சுத்தம் செய்யக்கூடாது.

புதிதாக அமைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாயை ஏற்கனவே உள்ள கழிவுநீர் கால்வாயுடன் இணைத்தல், கழிவுநீர் கால்வாயில் உள்ள மூடிகளை புதிதாக அமைத்தல் உள்ளிட்ட பணிகளை தவிர்த்து மற்ற பணிகளுக்கு மனிதர்களை பயன்படுத்தக்கூடாது. எந்தெந்த பணிகளில் மனிதர்களை பயன்படுத்துவது முற்றிலும் தவிர்க்க இயலாதோ, அந்த இடங்களில் உள்ளாட்சி அமைப்புகளிடம் உரிய அனுமதியை எழுத்து வடிவில் பெற்று உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் பயன்படுத்த வேண்டும்.

செப்டிக் டேங்க், கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி நச்சு வாயு தாக்கி மரணம் ஏற்படுவதை தடுக்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அதிகாரிகள், மனித கழிவுகளை மனிதனே அள்ளுவதை தடை செய்தல் மற்றும் மறுவாழ்வு சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்க வேண்டும். கால்நடைகள் வளர்ப்பு இடங்களில் உள்ள கால்நடை கழிவுகளையும் எந்திரங்கள் மூலம் அகற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

காசோலை

முன்னதாக பல்லடம் அருகே குப்பாண்டம்பாளையத்தில் இயங்கி வரும் ஒரு காம்பேக்டிங் நிறுவனத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 14-ந் தேதி, சாயக்கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த 4 தொழிலாளர்கள் மூச்சுத்திணறி இறந்தார்கள். அது தொடர்பாக ஜெகதீ‌‌ஷ் ஹிர்மானி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.. சாயக்கழிவு தொட்டியை சுத்தம் செய்தபோது வி‌‌ஷ வாயு தாக்கி உயிரிழந்த அசாம் தொழிலாளர்கள் 4 பேரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத்தொகையாக ரூ.7 லட்சத்து 50 ஆயிரத்துக்கான காசோலையை தனியார் நிறுவனத்தின் சார்பில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அவர் வழங்கினார்.

கூட்டத்தில் மாநகர போலீஸ் கமி‌‌ஷனர் சஞ்சய்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி, மாநகர துணை கமி‌‌ஷனர் உமா, மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரி ரமே‌‌ஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரி சேகர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் தேசிய துப்புரவு மறுவாழ்வு ஆணைய உறுப்பினர் ஜெகதீ‌‌ஷ் ஹிர்மானி நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்திய அளவில் செப்டிக் டேங்க், கழிவுநீர் தொட்டிகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்தபோது இறப்பு சம்பவங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த சம்பவங்கள் தமிழகத்தில் அதிகமாக நடப்பது வேதனையளிக்கிறது. இதுபோன்ற சம்பவங்களில் இதுவரை 242 பேர் தமிழகத்தில் இறந்துள்ளனர். மிகப்பெரிய விழிப்புணர்வு பணியை தமிழக அரசுடன் இணைந்து மேற்கொள்ளப்பட உள்ளது. மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்கள் மூலமாக பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

துப்புரவு தொழிலாளர்களுக்கு சுகாதாரம், சம்பளம், வீட்டு வசதி, அவர்களின் குழந்தைகளுக்கு கல்வியை வழங்குவதில் முனைப்பு காட்ட வேண்டும். துப்புரவு தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வியை அளித்து அவர்கள் உயர்ந்த நிலையை அடைய வழிவகுக்க வேண்டும். செப்டிக் டேங்க், கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு மனிதர்கள் இறந்தால், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவன உரிமையாளர், சம்பந்தப்பட்ட அரசு சுகாதார அதிகாரி ஆகியோர் மீது கண்டிப்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற பணிகளுக்கு ரோபோ வந்து விட்டது. பல மாநகராட்சிகளில் இந்த ரோபோவை வாங்கி பயன்படுத்துகிறார்கள். இந்த ரோபோ வாங்குவதற்கு மத்திய அரசு மானியம் வழங்கும். தனியார் துப்புரவு தொழிலாளர்களுக்கு சம்பளம் கிடைப்பதில் உள்ள பிரச்சினைகளை தீர்க்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story