திருச்செங்கோட்டில் பூட்டிய ஜவுளிக்கடையில் பதுங்கி ரூ.1¾ லட்சம் திருடியவர் கைது


திருச்செங்கோட்டில் பூட்டிய ஜவுளிக்கடையில் பதுங்கி ரூ.1¾ லட்சம் திருடியவர் கைது
x
தினத்தந்தி 11 July 2019 3:30 AM IST (Updated: 11 July 2019 3:59 AM IST)
t-max-icont-min-icon

திருச்செங்கோட்டில் பூட்டிய ஜவுளிக்கடையில் பதுங்கி இருந்து ரூ.1¾ லட்சத்தை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

திருச்செங்கோடு,

திருச்செங்கோடு வடக்குரத வீதியில் உள்ள ஒரு பிரபல ஜவுளிக்கடையின் உரிமையாளர் ராஜேந்திரன் கடந்த 8-ந் தேதி இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று முன்தினம் காலை கடைக்கு வந்து பார்த்தபோது, கடையின் வாசல் பூட்டு அப்படியே இருக்க உள்ளே இருந்த கல்லா பெட்டியை உடைத்து அதில் இருந்த ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து திருச்செங்கோடு டவுன் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பூட்டியிருந்த கடைக்கு முன்பு இரவு முழுவதும் காவலாளி இருந்தபோது, கடையில் வேலை செய்யும் யாரோ ஒருவர் கடைக்குள்ளேயே பதுங்கி இருந்துகொண்டு நள்ளிரவு பணத்தை எடுத்துக்கொண்டு மொட்டை மாடி வழியாக தப்பிச்சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்.

இதன்பேரில் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, கடையின் தரைத்தளத்தில் அலங்கார “மேட்” ஒட்டும் பணியில் ஈடுபட்டிருந்த திருச்செங்கோடு குமாரமங்கலத்தை சேர்ந்த பார்த்திபன் (வயது 24) என்பவர் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர், கடையில் சில நாட்களாக வேலைக்கு வந்து சென்றதால் மொட்டை மாடிக்கு செல்லும் கதவின் சாவி எங்கே இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டேன்.

சம்பவத்தன்று கடையை பூட்டிவிட்டு சென்றதும் உள்ளே பதுங்கி இருந்துகொண்ட நான் கல்லாவை உடைத்து பணத்தை திருடினேன். பின்னர் சாவியை எடுத்துக்கொண்டு மொட்டை மாடி கதவை திறந்து தப்பிச்சென்றேன் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த பணத்தை மீட்டனர்.

Next Story