ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற நோட்டீசு, மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்


ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற நோட்டீசு, மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 11 July 2019 4:00 AM IST (Updated: 11 July 2019 5:28 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற நோட்டீசு கொடுத்த மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஈரோடு,

நீர்நிலைகளில் ஆக்கிரமித்து வசித்து வரும் பொதுமக்களை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பெரும்பள்ளம் ஓடையின் கரையோரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். அங்கு உள்ளவர்களிடம் வீடுகளை காலி செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

இதுதொடர்பாக அவர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீசு வழங்கி உள்ளனர்.

இந்தநிலையில் ஈரோடு பொய்யேரிகரை பகுதிக்கு மாநகராட்சி அதிகாரிகள் நேற்று காலை சென்றனர். அங்கு 15 நாட்களில் வீடுகளை காலி செய்ய வேண்டும் என்று அவர்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் நோட்டீசு கொடுத்தனர். இதனால் அதிகாரிகளை கண்டித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் ஈரோடு காந்திஜிரோடு பகுதியில் திரண்டனர். அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் கூறியதாவது:-

நாங்கள் பல ஆண்டுகளாக பொய்யேரிகரை பகுதியில் வசித்து வருகிறோம். நாங்கள் உள்ள பகுதி புறம்போக்கு நிலமாக இருந்தது. பின்னர் 2002-ம் ஆண்டு நத்தம் புறம்போக்காக மாற்றி பட்டா வழங்கப்பட்டது. இதனால் நாங்கள் வங்கிக்கடன் பெற்று வீடுகளை கட்டி உள்ளோம். கடந்த ஆண்டு ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக கூறி எங்களை காலி செய்ய அதிகாரிகள் நோட்டீசு கொடுத்தனர். இதுதொடர்பாக நாங்கள் மாவட்ட கலெக்டர், ஆணையாளரிடம் கோரிக்கை மனு கொடுத்து உள்ளோம்.

இந்தநிலையில் வீடுகளை 15 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் நோட்டீசு கொடுத்து உள்ளனர். பட்டா உள்ளவர்களை காலி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தக்கூடாது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

அதற்கு போலீசார் கூறுகையில், “உங்களது கோரிக்கையை மாவட்ட கலெக்டரிடம் மனுவாக எழுதி கொடுங்கள். உரிய நடவடிக்கை எடுக்கப்படும்”, என்று கூறினார்கள். அதன்பிறகு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது கூறியதாவது:-

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெரும்பள்ளம் ஓடையை தூர்வாரி இருபுறமும் கான்கிரீட் தளம் அமைக்கப்பட உள்ளது. இதனால் ஓடையோரமாக உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளது. அங்குள்ள பொதுமக்களுக்கு நிபந்தனை பட்டா வழங்கப்பட்டு உள்ளது. எனவே ஓடையை தூர்வாரி பராமரிக்கப்பட உள்ளதால் வீடுகளை காலி செய்ய வேண்டும் என்று நோட்டீசு வழங்கி வருகிறோம். அவர்களுக்கு மாற்று தீர்வாக மத்திய அரசின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள வீட்டை ரூ.80 ஆயிரம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். இதற்கு அவர்கள் முறையாக விண்ணப்பித்தால் வீடுகள் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

ஈரோட்டில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story