விபத்தில் சிக்கியவரை அழைத்து செல்ல மறுத்ததால் கார் கண்ணாடி உடைப்பு, 50 பேர் மீது வழக்கு - கோவை அருகே பரபரப்பு


விபத்தில் சிக்கியவரை அழைத்து செல்ல மறுத்ததால் கார் கண்ணாடி உடைப்பு, 50 பேர் மீது வழக்கு - கோவை அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 11 July 2019 4:00 AM IST (Updated: 11 July 2019 5:28 AM IST)
t-max-icont-min-icon

கோவை அருகே விபத்தில் சிக்கியவரை அழைத்து செல்ல மறுத்ததால் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அப்பகுதியில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டனர்.

பேரூர், 

கோவையை அடுத்த ஆலாந்துறை அருகே உள்ள செம்மேடு கோட்டைக்காட்டை சேர்ந்தவர் பாபு (எ) பழனிச்சாமி (வயது 55), வெங்காய வியாபாரி. இவர் நேற்று முன்தினம் இரவு பூலுவபட்டியில் இருந்து சிறுவாணி ரோடு வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கள்ளிப்பாளையம் பிரிவு அருகே சாலையை கடக்க முயன்ற அதே பகுதியை சேர்ந்த ரங்கசாமி (45) என்பவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் ரங்கசாமி மற்றும் பழனிச்சாமி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்த அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின்பேரில் பழனிச்சாமியின் மகன் ஹரிபிரசாத் (24) வீட்டில் இருந்து தனது காரை எடுத்துக்கொண்டு கள்ளிப்பாளையம் பிரிவுக்கு சென்றார்.

இதைத்தொடர்ந்து அங்கு விபத்தில் அடிபட்டு கிடந்த தனது தந்தை பழனிச்சாமியை காரில் ஏற்றிக்கொண்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல முயன்றார். அப்போது அங்கு திரண்டு இருந்த பொதுமக்கள் ரங்கசாமியையும் காரில் ஏற்றிச்செல்ல வேண்டியதுதானே? என கூறினர். இதனால் ஹரிபிரசாத்துக்கும் அங்கு திரண்டு இருந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் உண்டாகி மோதல் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் காரை வலது பக்கமாக திருப்பி கொண்டு செல்ல ஹரிபிரசாத் முயன்றார். அப்போது அதே ஊரை சேர்ந்த செந்தில்குமார் (42) என்பவர், கார் மோதி படுகாயம் அடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த சிலர் கற்களை வீசி காரின் கண்ணாடியை உடைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, பேரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பாலமுருகன், ஆலாந்துறை இன்ஸ்பெக்டர் தங்கம் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அவர்கள் சமாதானம் அடைந்தனர். இதனைதொடர்ந்து பழனிச்சாமி ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

ரங்கசாமி மற்றும் செந்தில்குமார் மற்றொரு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கண்ணாடி உடைக்கப்பட்ட கார் ஆலந்துறை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் அப்பகுதியில் அசம்பாவித சம்பவம் ஏற்படாமல் இருக்க கள்ளிப்பாளையம், செம்மேடு, கோட்டைக்காடு உள்ளிட்ட கிராமங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதைதொடர்ந்து ரங்கசாமி அளித்த புகாரின் பேரில் பழனிச்சாமி மீதும், கார் கண்ணாடியை உடைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக பழனிச்சாமி கொடுத்த புகாரின் பேரில் அந்த பகுதியை சேர்ந்த கார்த்திக் உள்பட 50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் சாதி பெயரை கூறி திட்டியதாக செந்தில்குமார் அளித்த புகாரின் பேரில் ஹரிபிரசாத், பழனிச்சாமி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆலாந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story