மாவட்ட செய்திகள்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் குளத்தை மத்திய அரசு அதிகாரி ஆய்வு + "||" + Mylapore Kapaleeswarar Temple Pool Central government officers inspection

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் குளத்தை மத்திய அரசு அதிகாரி ஆய்வு

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் குளத்தை மத்திய அரசு அதிகாரி ஆய்வு
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் குளத்தை மத்திய அரசு அதிகாரி ஆய்வு செய்தார்.
அடையாறு,

நாடு முழுவதும் நிலத்தடி நீர் வற்றிய, தண்ணீர் பற்றாக்குறை உள்ள 255 மாவட்டங்கள் கண்டறியப்பட்டு அங்கு நீர் பாதுகாப்பு, நீர் சேமிப்பு மற்றும் நீர் மேலாண்மை பணிகளை ஊக்குவிக்கும் நோக்கத்தில் மத்திய அரசால் ஜல்சக்தி அபியான் என்ற திட்டம் உருவாக்கப்பட்டது.


இதற்காக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் இணை, துணை செயலாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் கண்காணிப்பு அதிகாரியாக இருப்பார்கள். மாவட்டங்களின் பகுதிகள் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, 4 பிரிவுகளுக்கு ஒரு கண்காணிப்பு அதிகாரி இருப்பார்.

இந்த திட்டத்தின் முதல்கட்ட பணிகள் கடந்த 1-ந் தேதி முதல் தொடங்கியது. செப்டம்பர் 15-ந் தேதி வரை இந்த பணிகள் நடைபெறும்.

இந்த நிலையில் சென்னை மாவட்டத்தில் மயிலாப்பூர், திருல்லிக்கேணி, கிண்டி, சைதாப்பேட்டை, சிந்தாதிரிபேட்டை உள்ளிட்ட பகுதிகள் அடங்கிய 4 பிரிவுகளுக்கு கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள மத்திய நீர்வள ஆணைய இயக்குனர் ராஜீவ் சிங்கால் நேற்று மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் குளத்தை ஆய்வு செய்தார்.

அப்போது அவருக்கு, மழை காலங்களில் 4 மாட வீதிகள் வழியாக குளத்திற்குள் தண்ணீர் வருவதற்கும், மழைநீர் சேமிப்பு ஏற்பாடுகள் மற்றும் குளத்தை ஆழப்படுத்தி தண்ணீர் அதிக அளவு தேக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கோவிலின் இணை ஆணையர் காவேரி, குளத்தின் வரைபடத்துடன் விளக்கம் அளித்தார்.

அதன்பிறகு ராஜீவ் சிங்கால் நிருபர்களிடம் கூறிய தாவது:-

ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் சென்னை மாவட்டத்தில் எனக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் மழைநீர் சேமிப்பு, மரம் வளர்த்தல், குளங்கள் சீரமைப்பு, நீர் மேலாண்மை உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்து வருகிறேன். சைதாப்பேட்டை, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் சேமிப்புக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஆய்வு செய்தேன்.

அதேபோல் மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவில் குளத்தில் மழைநீர் சேமிப்பு, நிலத்தடி நீர் உயர்வுக்கான பணிகள் குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தேன். இது சம்பந்தமாக மீதமுள்ள பணிகள் இன்னும் ஒரு மாதத்தில் முடிவடையும் என இணை ஆணையர் உறுதி அளித்து உள்ளார். இதன் மூலம் பருவமழையின்போது இந்த குளத்தில் முழுமையான அளவு நீரை தேக்கி வைக்க முடியும். அதன் மூலம் சுற்றுவட்டார பகுதி மக்கள் பயனடைவார்கள்.

நாளை (அதாவது இன்று) திருவல்லிக்கேணி, சிந்தாதிரிபேட்டை ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்ய உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மயிலாப்பூர் தாசில்தார் சுப்பிரமணி மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.