ஜோலார்பேட்டையில் இருந்து 50 வேகன்களில் குடிநீர் நிரப்பப்பட்ட ரெயில் இன்று சென்னை புறப்படுகிறது


ஜோலார்பேட்டையில் இருந்து 50 வேகன்களில் குடிநீர் நிரப்பப்பட்ட ரெயில் இன்று சென்னை புறப்படுகிறது
x
தினத்தந்தி 12 July 2019 5:00 AM IST (Updated: 11 July 2019 11:11 PM IST)
t-max-icont-min-icon

ஜோலார்பேட்டையில் இருந்து 50 வேகன்களில் குடிநீர் நிரப்பப்பட்ட ரெயில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை சென்னை புறப்பட்டு செல்கிறது.

ஜோலார்பேட்டை,

சென்னையில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் ஜோலார்பேட்டையில் இருந்து ரெயில் மூலம் குடிநீர் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ.65 கோடி நிதியை ஒதுக்கி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்தார்.

அந்த நிதியின் மூலம் ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே பார்சம்பேட்டையில் உள்ள 5-வது யார்டுக்கு மேட்டுசக்கரகுப்பம் காவிரி கூட்டு குடிநீர் திட்ட நீரேற்று நிலையத்தில் இருந்து குடிநீர் கொண்டு வருவதற்காக குழாய் அமைக்கும் பணி இரவு, பகலாக நடைபெற்றது. அதேநேரத்தில் பார்சம்பேட்டை யார்டிலும் ராட்சத குழாய்கள் அமைக்கும் பணியும் தீவிரமாக நடந்தது.

95 சதவீத பணிகள் முடிந்த நிலையில் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து 50 வேகன்கள் கொண்ட சரக்கு ரெயில் ஜோலார்பேட்டைக்கு வந்தது.

இதனைத்தொடர்ந்து 50 வேகன்களுக்கும் ஒரே நேரத்தில் குடிநீர் ஏற்றுவதற்காக ராட்சத குழாயில் இருந்து 50 வளைவு குழாய்கள் இணைப்பு ஏற்படுத்தப்பட்டு, அந்த பணிகளும் முடிவடைந்தது. அதன்பிறகு நேற்று முன்தினம் மேட்டுசக்கரகுப்பம் தொட்டியில் இருந்து ரெயில்வே வேகன்களுக்கு தண்ணீர் ஏற்ற சோதனை ஓட்டம் நடத்துவதற்காக பூஜை நடந்தது.

அதன்பிறகு நீரேற்று நிலையத்தில் இருந்து சோதனை ஓட்டம் தொடங்கும் வகையில் தண்ணீர் பம்ப் செய்யப்பட்டது. அப்போது ஆஞ்சநேயர் கோவில் அருகில் உள்ள இடத்தில் குழாயில் நீர்கசிவு ஏற்பட்டு, அந்த இடத்தில் குளம்போல் தண்ணீர் தேங்கியது. அதன்பிறகு கசிவு ஏற்பட்ட குழாய் சீரமைக்கப்பட்டது.

இதையடுத்து 50 வேகன்களில் தலா 50 ஆயிரம் லிட்டர் தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்றது. அதற்காக 100 பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அதில் 25 வேகன்களில் முழுகொள்ளவு வரை நிரப்பிவிட்டனர். அதனால் மீதம் உள்ள வேகன்களை நிரப்பமுடியாமல் போனது. அதை தொடர்ந்து மீண்டும் சக்கரகுப்பம் நீரேற்று நிலையத்தில் இருந்து தண்ணீர் பம்ப் செய்யப்பட்டு ரெயில் வேகன்களில் குடிநீர் நிரப்பப்பட்டது. மேலும் முழுக்கொள்ளளவு நிரப்பப்பட்ட 25 வேகன்களில் இருந்தும் தலா 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வெளியேற்றப்பட்டு சரியான அளவில் தண்ணீர் நிரப்பப்பட்டது.

ரெயில் நேற்று புறப்படும் என்ற நிலை இருந்தது. காலதாமதம் காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) புறப்பட உள்ளது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் மகேஸ்வரன் கொடியசைத்து ரெயிலை தொடங்கி வைக்கிறார். மதியம் 1 மணிக்கு ரெயில் வில்லிவாக்கம் ரெயில் நிலையத்தை சென்றடையும்.

அங்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்று, சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்க உள்ளனர்.

இதுபற்றி ஜோலார்பேட்டை ரெயில்வே உதவி கோட்ட பொறியாளர் அபிஷேக் சர்மா கூறுகையில், இன்று காலை 6 மணியளவில் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை நகர மக்களுக்கு குடிநீர் எடுத்து செல்லும் ரெயில் புறப்படுகிறது என்றார்.

Next Story