எட்டயபுரம் அருகே கோர விபத்து: திருமண நிகழ்ச்சிக்கு சென்ற பெண்கள் உள்பட 3 பேர் பலி கன்டெய்னர் லாரி மீது கார் மோதியது


எட்டயபுரம் அருகே கோர விபத்து: திருமண நிகழ்ச்சிக்கு சென்ற பெண்கள் உள்பட 3 பேர் பலி கன்டெய்னர் லாரி மீது கார் மோதியது
x
தினத்தந்தி 12 July 2019 3:30 AM IST (Updated: 11 July 2019 11:43 PM IST)
t-max-icont-min-icon

எட்டயபுரம் அருகே சாலையோரம் நின்ற கன்டெய்னர் லாரி மீது கார் மோதிய கோர விபத்தில் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற பெண்கள் உள்பட 3 பேர் பலியானார்கள். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

எட்டயபுரம், 

எட்டயபுரம் அருகே சாலையோரம் நின்ற கன்டெய்னர் லாரி மீது கார் மோதிய கோர விபத்தில் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற பெண்கள் உள்பட 3 பேர் பலியானார்கள். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருமண நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியைச் சேர்ந்தவர் ராம்மோகன் (வயது 56), விவசாயி. இவருடைய உறவினரின் திருமண நிகழ்ச்சி, கோவில்பட்டியில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக, நேற்று அதிகாலையில் ராம்மோகன் தன்னுடைய உறவினர்களுடன் காரில் புறப்பட்டு சென்றார். அந்த காரை அப்பகுதியைச் சேர்ந்த உறவினரான கண்ணனின் மகன் சுமன் (24) ஓட்டினார்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கீழக்கோட்டை நடுத்தெருவைச் சேர்ந்தவர் மொட்டையன் மகன் முருகன் (36), கன்டெய்னர் லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவில் ஒரு கன்டெய்னர் லாரியில் கோவையில் இருந்து துணி லோடு ஏற்றிக்கொண்டு, தூத்துக்குடி துறைமுகத்துக்கு புறப்பட்டு சென்றார்.

கன்டெய்னர் லாரி மீது கார் மோதல்

நேற்று காலை 7 மணியளவில் எட்டயபுரம் அருகே சிந்தலக்கரை துரைச்சாமிபுரம் விலக்கு அருகில் கன்டெய்னர் லாரியை சாலையோரமாக நிறுத்தி விட்டு, டிரைவர் முருகன் இயற்கை உபாதையை கழிக்க சென்றார். பின்னர் அவர் சிறிதுநேரத்தில் திரும்பி வந்து, கன்டெய்னர் லாரியில் ஏறி புறப்பட தயாரானார்.

அப்போது சுமன் ஓட்டி வந்த கார், கண் இமைக்கும் நேரத்தில் கன்டெய்னர் லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் கன்டெய்னர் லாரிக்கு அடியில் கார் புகுந்தது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

3 பேர் பலி

காரில் இருந்த ராம் மோகன், அவருடைய உறவினர்களான பாளையம்பட்டி மணிநகரைச் சேர்ந்த வீராசாமி மனைவி ராஜம்மாள் (55), பாளையம்பட்டி சண்முகவேல் நகரைச் சேர்ந்த ராமசாமி மனைவி சரோஜா (47) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கன்டெய்னர் லாரியில் பயங்கரமாக மோதியதில், காரின் முன்பகுதியில் இருந்த ராம் மோகனின் தலை துண்டானது.

மேலும் காரை ஓட்டிய சுமன், அவருடைய தம்பி ராஜ்குமார் (17), செல்வலட்சுமி (59) ஆகிய 3 பேரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடியவாறு கிடந்தனர்.

ஆஸ்பத்திரியில் அனுமதி

இந்த விபத்தை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் எட்டயபுரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன், விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர், சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

படுகாயம் அடைந்த சுமன், ராஜ்குமார், செல்வலட்சுமி ஆகிய 3 பேரும் எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டிரைவரிடம் விசாரணை

விபத்தில் இறந்த ராம் மோகன், ராஜம்மாள், சரோஜா ஆகிய 3 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கன்டெய்னர் லாரி டிரைவர் முருகனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எட்டயபுரம் அருகே திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது நிகழ்ந்த கோர விபத்தில் பெண்கள் உள்பட 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story