கற்பித்தலில் சுணக்கம் இருப்பது கண்டறியப்பட்டால் தலைமை ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கை


கற்பித்தலில் சுணக்கம் இருப்பது கண்டறியப்பட்டால் தலைமை ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 11 July 2019 10:15 PM GMT (Updated: 11 July 2019 6:32 PM GMT)

ஆய்வு அலுவலர்களின் ஆய்வின்போது கற்றல், கற்பித்தல் பணிகளில் சுணக்கம் இருப்பது கண்டறியப்பட்டால் தலைமை ஆசிரியர் மற்றும் பாட ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை,

இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தை கல்வி உள்ளிட்ட செயல்பாடுகளில் முதன்மை மாவட்டமாக மாற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆய்வு அலுவலர்கள் பள்ளி பார்வையின்போது ஒரு சில பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளில் பெரும் சுணக்கம் இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றை களைய தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

தமிழ் வாசித்தலில் 100 சதவீதம் இலக்கை எட்டுதல், செய்தித்தாள் வாசிப்பதை தினந்தோறும் வலியுறுத்துதல், ஆங்கில இலக்கணத்தை அடிப்படையிலேயே பிழையின்றி கற்றுத் தருதல், தெளிவாக உச்சரித்தல், ஆங்கிலம் வாசிப்பு, பேச எழுத சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளுதல், 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளுதல், தேர்ச்சி பகுப்பாய்வு அறிக்கைகளை பார்வையிட்டு குறைபாடுகளை களைந்து சிறப்பான கல்வியை வழங்க நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகள் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புதிய பாடத்திட்டம் சார்ந்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து, அனைத்து பள்ளிகளிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு அவற்றை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் விடுப்பில் சென்றாலும் நடத்த வேண்டிய பாடத்தை பணிக்கு திரும்பியவுடன் நடத்த வேண்டும். கடினமான பாடங்களையும் கற்பித்தல் துணைக் கருவியுடன் எளிமையாக நடத்த வேண்டும். மேலும் பாட ஏடுகளை மாணவர்கள் பராமரிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

செய்முறை பயிற்சி ஏடு, கட்டுரை, உற்றுநோக்கல் பதிவேடு, வடிவியல், மேப் உள்ளிட்ட மாணவர்களின் பாடத்திட்டம் சார்ந்த பதிவேடுகளை நாள்தோறும் திருத்தம் செய்து, பிழையை நீக்கம் செய்து, கூடுதல் பயிற்சி அளிக்க ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்க தலைமை ஆசிரியர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி ஏடுகளை தினசரி ஆசிரியர்கள் திருத்துகிறார்களா? என தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்.

இந்த அனைத்து செயல்பாடுகளையும் கண்காணிக்கும் வகையில் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மாற்றுப்பணி பதிவேடு, உற்றுநோக்கல் பதிவேடு, பணிமுடிப்பு பதிவேடு, வாட்ச் ரிஜிஸ்டர், பாடகுறிப்பேடு கண்காணித்தல், மதிப்பெண் பட்டியல் போன்ற அனைத்து பதிவேடுகளையும் பராமரிக்க வேண்டும் என்று மின்னஞ்சல்கள் மூலமாகவும், தலைமை ஆசிரியர்களின் கூட்டங்களின் போது வலியுறுத்தி தெரிவிக்கப் பட்டுள்ளன.

ஆனால் ஆய்வு அலுவலர்களின் ஆய்வின்போது பல்வேறு பள்ளிகளில் இதில் சுணக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பொறுப்பு தலைமை ஆசிரியர்கள் இருக்கும் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் பணிகளில் பெரும் சுணக்கம் இருப்பது தெரியவருகிறது. மேலும் இதுகுறித்த புகார்களும் வந்துள்ளன.

இந்த அறிவுரைகளை பின்பற்றி கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை சிறப்பாக செய்ய வேண்டும் என்று அனைத்து ஆசிரியர்களுக்கும் தெரிவிக்க வேண்டும். தலைமை ஆசிரியர்கள் தாங்கள் பராமரிக்க வேண்டிய பதிவேடுகளை பராமரிக்க வேண்டும். அவற்றை ஆய்வு அலுவலர்கள் ஆய்வின்போது சமர்ப்பிக்க வேண்டும். ஆசிரியர்கள் பராமரிக்க வேண்டிய மற்றும் மாணவர்களின் கல்வி சார்ந்த பதிவேடுகளை திருத்தம் செய்துள்ளார்களா? என கண்காணித்து விவரங்களை தலைமை ஆசிரியர்கள் பதிவு செய்ய வேண்டும்.

எனவே அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் பள்ளியின் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை கண்காணிக்கவும், குறைபாடு உள்ள ஆசிரியர்களை எச்சரிக்கை செய்யவும் வேண்டும். ஆய்வு அலுவலர்களின் ஆய்வின்போது கற்றல் கற்பித்தல் பணிகளில் சுணக்கம் இருப்பது கண்டறியப்பட்டால் தலைமை ஆசிரியர் மற்றும் பாட ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story