குடிநீர் உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட 10 மின்மோட்டார்கள் பறிமுதல்


குடிநீர் உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட 10 மின்மோட்டார்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 12 July 2019 4:15 AM IST (Updated: 12 July 2019 12:19 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் குடிநீர் உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட 10 மின் மோட்டார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருவாரூர்,

திருவாரூர் ஒன்றியத்தில் அனைத்து பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு தேவையான அளவு குடிநீர் வினியோகம் செய்ய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் வீடுகள், வர்த்தக நிறுவனங்களில் ஊராட்சி இணைப்புகளில் இருந்து அதிக அளவு தண்ணீரை உறிஞ்ச வசதியாக மின் மோட்டார்களை பொருத்தி இருப்பதாக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரிகள் தேவராஜ், சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கர், ஊராட்சி செயலாளர் சிவராஜ் ஆகியோர் வைப்பூர் பகுதியில் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்தனர். அப்போது வீடுகளில் சட்ட விரோதமாக மின்மோட்டார்கள் பொருத்தப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த மின்மோட்டார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நடவடிக்கை

இதுகுறித்து வட்டார வளர்ச்சி அதிகாரிகள் கூறுகையில், குடிநீர் குழாயில் மின் மோட்டார் மூலம் தனிநபர் குடிநீர் உறிஞ்சி எடுப்பது சட்டப்படி குற்றமாகும். தண்ணீரின் அவசியத்தை கருதி பொதுமக்கள் தேவைக்கு ஏற்ப சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மின் மோட்டார்கள் மூலம் குடிநீரை உறிஞ்சி எடுக்கப்பட்டது கண்டறியப்பட்டு, 10 மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவர்களின் குடிநீர் இணைப்பை துண்டிப்பதுடன் அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படும் என தெரிவித்தனர். 

Next Story