வியாபாரிகளை மிரட்டி பணம் வசூல்: போலி வணிகவரி அதிகாரி கைது


வியாபாரிகளை மிரட்டி பணம் வசூல்: போலி வணிகவரி அதிகாரி கைது
x
தினத்தந்தி 11 July 2019 10:15 PM GMT (Updated: 11 July 2019 6:57 PM GMT)

சென்னையில் வியாபாரி களை மிரட்டி வசூல் வேட்டையில் ஈடுபட்ட போலி வணிகவரி துறை அதிகாரி கைது செய்யப்பட்டார்.

சென்னை,

சென்னை சிந்தாதிரிப்பேட்டை பழைய பங்களா தெருவை சேர்ந்தவர் சிவலிங்கம்(வயது 44). இவர், பீடி, சிகரெட் மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.

இவரிடம் கடந்த ஒரு வருடமாக சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள வணிகவரி துறை தலைமை அலுவலகத்தில் அதிகாரியாக இருப்பதாக கூறி மர்மநபர் ஒருவர், அடிக்கடி பணம் பறித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவும் அந்தநபர் மீண்டும் சிவலிங்கத்தின் கடைக்கு வந்து, அவரிடம் ரூ.10 ஆயிரம் கேட்டு மிரட்டினார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சிவலிங்கம், அந்த நபருக்கு தெரியாமல் சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு ரகசியமாக தகவல் கொடுத்தார்.

உடனடியாக இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான தனிப்படை போலீசார் விரைந்து சென்று, சிவலிங்கத்திடம் பணம்கேட்டு மிரட்டிய நபரை மடக்கிப்பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் வணிகவரி துறை அதிகாரி இல்லை என்பது தெரியவந்தது.

அவரது பெயர் பழனிவேல் (48) என்பதும், சென்னை கீழ்ப்பாக்கம் ஓசான் குளம் குடிசைமாற்று வாரியக்குடியிருப்பில் வசிப்பவர் என்பதும், வணிகவரி அதிகாரி போல் நடித்து, ஏராளமான வியாபாரிகளை மிரட்டி வசூல் வேட்டையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து பழனிவேலை போலீசார் கைது செய்தனர்.

Next Story