மாவட்ட செய்திகள்

காரிமங்கலம் அருகேநிதி நிறுவன அதிபரை கடத்தி கொன்றது ஏன்? + "||" + Near Karimangalam Why was the principal of the financial institution abducted?

காரிமங்கலம் அருகேநிதி நிறுவன அதிபரை கடத்தி கொன்றது ஏன்?

காரிமங்கலம் அருகேநிதி நிறுவன அதிபரை கடத்தி கொன்றது ஏன்?
காரிமங்கலம் அருகே நிதி நிறுவன அதிபரை கடத்தி கொன்றது ஏன்? என்பது பற்றி கைதான பேக்கரி கடைக்காரர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
காரிமங்கலம், 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த முக்குளம் நகுலன் கொட்டாயை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 30). இவர் நேற்று முன்தினம் முக்குளம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வந்தார். அங்கு பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரனிடம் சரணடைந்து பரபரப்பு தகவலை தெரிவித்தார். அப்போது ரங்கநாதன், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள சின்னமுத்தூரை சேர்ந்த நிதி நிறுவன அதிபர் லட்சுமணன் (53) என்பவரை கடந்த 30-ந் தேதி இரவு கொடுக்கல்-வாங்கல் தகராறில் கொலை செய்து உடலை முக்குளம் ஏரியில் புதைத்து வைத்திருப்பதாக, தெரிவித்தார்.

இதுபற்றி கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன் காரிமங்கலம்் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார் மற்றும் போலீசார் ரங்கநாதனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையின்போது ரங்கநாதன் போலீசாரிடம் கூறியதாவது:-

நான் (ரங்கநாதன்) பொம்மஅள்ளி பிரிவு ரோட்டில் பேக்கரி கடை நடத்தி வந்தேன். அப்போது எனக்கு முக்குளம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. பேக்கரி கடையில் கிடைக்கும் வருமானத்தில் பெரும் பகுதியை அந்த பெண்ணுக்கு செலவழித்து வந்தேன். இதனால் நாளடைவில் பேக்கரி கடை நடத்துவதில் எனக்கு நஷ்டம் ஏற்பட்டது.

இந்தநிலையில் அந்த பெண் திடீரென நிதி நிறுவன அதிபர் லட்சுமணனுடன் பழக்கமானார். இதை அறிந்த நான் எனது பணத்தேவையை பூர்த்தி செய்து கொள்ள அந்த பெண்ணின் உதவியை நாடினேன். அந்த பெண்ணும் எனக்காக ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை லட்சுமணனிடம் கடனாக வாங்கி கொடுத்தார்.

அந்த பணத்தை குறிப்பிட்ட தேதியில் லட்சுமணனுக்கு திருப்பி கொடுக்க என்னால் முடியவில்லை. இதனால் லட்சுமணன் பணம் வாங்கி கொடுத்த அந்த பெண்ணிடம் பணத்தை கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதனால் அந்த பெண்ணுக்கும், லட்சுமணனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து லட்சுமணன் என்னிடம் பணம் கேட்டு வந்தார்.

இதனால் மனவேதனையில் இருந்த நான், லட்சுமணனை தீர்த்து கட்ட முடிவு செய்தேன். அதற்காக எனக்கு தெரிந்த 2 பேரை தேர்ந்தெடுத்து லட்சுமணனை கடத்தி வந்து என்னிடம் ஒப்படைக்கும்படி கூறினேன். இதற்காக அவர்களுக்கு கூலியாக ரூ.20 ஆயிரம் பேசி முன்பணமாக ரூ.10 ஆயிரம் கொடுத்தேன். திட்டமிட்டப்படி கடந்த மாதம் 30-ந் தேதி இரவு அந்த 2 பேரும் லட்சுமணனை கை, கால்களை கட்டியும், வாய் மற்றும் மூக்கு பகுதியை பிளாஸ்டிக் டேப்பால் ஒட்டியும் ஒரு காரில் கடத்தி வந்து முக்குளம் ஏரிப்பகுதியில் என்னிடம் ஒப்படைத்தனர். அங்கு லட்சுமணனை கல்லால் தாக்கி கொன்று உடலை அருகில் இருந்த ஏரியில் 2 பேர் துணையுடன் புதைத்து வைத்தேன்.

இவ்வாறு ரங்கநாதன் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து ஏரியில் புதைக்கப்பட்டிருந்த லட்சுமணன் உடல் நேற்று மாலை காரிமங்கலம் தாசில்தார் சேதுலிங்கம், தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் ஆகியோர் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது. தர்மபுரி மருத்துவ கல்லூரி டாக்டர் பிரேத பரிசோதனை செய்தார். பின்னர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதை காண ஏரி பகுதியில் மக்கள் திரண்டு இருந்தனர்.

இந்த கொலை தொடர்பாக ரங்கநாதனை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். நிதி நிறுவன அதிபர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.