நாகூரில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்காவிட்டால் சாலை மறியல் பொதுமக்கள் அறிவிப்பு


நாகூரில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்காவிட்டால் சாலை மறியல் பொதுமக்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 11 July 2019 10:45 PM GMT (Updated: 11 July 2019 7:10 PM GMT)

நாகூரில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்காவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் அறிவித்துள்ளனர்.

நாகூர்,

நாகை மாவட்டம் நாகூரில் அம்பேத்கர் நகர் உள்ளது. இந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள், பீரோடு தெருவில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான குடிநீர் குழாயில் தான் நாள்தோறும் தண்ணீர் பிடித்து செல்கின்றனர். சில மாதங்களாகவே நாகூர் நகரில் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடி வருகிறது. தற்போது சில நாட்களாகவே குடிநீர் தட்டுப்பாடு இருந்து வருகிறது. வாரத்திற்கு ஒரு நாள் கூட குடிநீர் வருவதில்லை. 15 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வருகிறது. குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக அந்த பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் குடிநீர் இன்றாவது வருமா? என்று காலை மற்றும் மாலை நேரங்களில் பல மணி நேரம் அம்பேத்கர் நகர் மற்றும் பீரோடு தெரு பொதுமக்கள் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

சாலை மறியல் போராட்டம்

வாரத்தில் ஒரு முறை வரும் குடிநீரை இரண்டு நாட்களுக்கு கூட பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. குடிக்க கூட தண்ணீர் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து நாகூரில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தட்டுப்பாட்டை போக்காவிட்டால் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அந்த பகுதி மக்கள் அறிவித்துள்ளனர்.

Next Story