காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு, விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர் சாவு


காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு, விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர் சாவு
x
தினத்தந்தி 11 July 2019 10:30 PM GMT (Updated: 11 July 2019 11:51 PM GMT)

காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர் உயிரிழந்தார். அவரை போலீசார் அடித்துக் கொன்றதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

காட்டுமன்னார்கோவில்,

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது காட்டுமன்னார்கோவிலில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையத்தின் அருகில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தார். இதை பார்த்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து, போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், உருத்திரசோலை கிராமத்தை சேர்ந்த மூர்த்தி மகன் வினோத் (வயது 25) என்பதும், பல்வேறு பகுதிகளில் உள்ள ஏ.டி.எம். மையங்களுக்கு, பணம் எடுக்க வருபவர்களிடம் உதவி செய்வதுபோல் நடித்து நூதன முறையில் மோசடி செய்து பணத்தை திருடிச் சென்றதும் தெரியவந்தது.

அதனை தொடர்ந்து நேற்று அதிகாலை போலீசார், வினோத்தை உருத்திரசோலையில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்து சென்றனர். பின்னர் அவரது வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கிருந்த 6 ஏ.டி.எம். கார்டுகள் மற்றும் பல்வேறு பகுதியில் உள்ள ஏ.டி.எம். எந்திரங்களில் இருந்து பணம் எடுத்ததற்கான சீட்டுகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் போலீசார் விசாரணைக்காக வினோத்தை மீண்டும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். இதையடுத்து அவரை அங்குள்ள அறையில் அடைத்து வைத்திருந்தனர்.

சிறிது நேரம் கழித்து போலீசார் அந்த அறையை திறந்து பார்த்தபோது, அங்குள்ள ஜன்னல் கம்பியில் வேட்டியால் வினோத் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் உயிருக்கு போராடி கிடந்ததாக தெரிகிறது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வினோத் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து வினோத்தின் உடல், மருத்துவமனையில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டது.

இந்நிலையில் வினோத் இறந்தது பற்றி அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் மருத்துவமனைக்கு ஒன்று திரண்டு வந்தனர். அப்போது உறவினர்கள், விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட வினோத்தை அடித்து கொலை செய்து விட்டதாக கூறி, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள், வினோத்தின் உடலை காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையிலேயே பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், அவரது சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோஷம் எழுப்பியபடி மருத்துவமனை அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து அப்பகுதியில் அசம்பாவிதம் ஏற்படும் சூழல் நிலவியதால், வினோத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்ப போலீசார் முயன்றனர். அதற்கு வினோத்தின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் அனைவரையும் சமாதானப்படுத்தி, வினோத்தின் உடலை கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். 

Next Story