மாவட்ட செய்திகள்

ராஜினாமா செய்து விட்டு மும்பை சென்றவர்கள் பெங்களூரு வந்தனர்சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படிசபாநாயகர் முன் 10 எம்.எல்.ஏ.க்கள் ஆஜர் + "||" + By order of the Supreme Court 10 MLAs present before Speaker

ராஜினாமா செய்து விட்டு மும்பை சென்றவர்கள் பெங்களூரு வந்தனர்சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படிசபாநாயகர் முன் 10 எம்.எல்.ஏ.க்கள் ஆஜர்

ராஜினாமா செய்து விட்டு மும்பை சென்றவர்கள் பெங்களூரு வந்தனர்சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படிசபாநாயகர் முன் 10 எம்.எல்.ஏ.க்கள் ஆஜர்
ராஜினாமா செய்து விட்டு மும்பை சென்ற எம்.எல்.ஏ.க்களில் 10 பேர், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, நேற்று பெங்களூரு வந்து சபாநாயகர் முன்பு ஆஜரானார்கள்.
பெங்களூரு,

கர்நாடகத்தில் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

ராஜினாமாவை ஏற்க மறுப்பு

இந்த நிலையில், அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 11 பேரும், ஜனதாதளம் (எஸ்) எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் ராஜினாமா செய்த நிலையில், அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இரு சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் விலக்கிக் கொண்டு பாரதீய ஜனதா பக்கம் சாய்ந்தனர். இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் மேலும் 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர்.

இதுவரை 16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளதால், குமாரசாமி அரசு மெஜாரிட்டி பலத்தை இழந்து விட்டது. ஆனால் எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ரமேஷ்குமார் ஏற்றுக் கொள்ளாமல் காலம் தாழ்த்தி வருவதால் கர்நாடகத்தில் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.

சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை

இந்தநிலையில் முதன் முதலில் ராஜினாமா செய்து விட்டு, மும்பை சென்று அங்குள்ள நட்சத்திர ஒட்டலில் தங்கி இருந்த 12 எம்.எல்.ஏ.க்களில் பிரதீப் கவுடா பட்டீல், ரமேஷ் ஜார்கிகோளி, பைரதி பசவராஜ், பி.சி.பட்டீல், எஸ்.டி.சோம சேகர், அர்பைல் சிவராம் ஹெப்பார், மகேஷ் குமடள்ளி, கே.கோபாலய்யா, எச்.விஸ்வநாத், நாராயணகவுடா ஆகிய 10 பேர், தங்கள் ராஜினாமா கடிதங்களை ஏற்குமாறு சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என்றும், அவர் தங்களை பதவி நீக்கம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி நேற்றுமுன் தினம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இவர்களில் 7 பேர் காங்கிரசையும், 3 பேர் ஜனதாதளம் (எஸ்) கட்சியையும் சேர்ந்தவர்கள்.

இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று காலை விசாரணைக்கு வந்தது.

அப்போது அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி வாதாடுகையில், மனுதாரர்களின் நோக்கம் ராஜினாமா செய்வதுதான் என்றும், இவர்களை சபாநாயகர் சந்திக்க வேண்டும் என்றும் கூறினார்.

நீதிபதிகள் உத்தரவு

இதைத்தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

இந்த வழக்கில் மனு தாக்கல் செய்துள்ள 10 எம்.எல்.ஏக்கள் இன்று (அதாவது நேற்று) மாலை 6 மணிக்கு சபாநாயகரை சந்திக்க அனுமதிக்கப் படுகிறார்கள். குறிப்பிட்ட இந்த நேரத்தில் இந்த எம்.எல்.ஏ.க்களை சந்திக்க சபாநாயகர் நேரம் ஒதுக்க வேண்டும். இந்த 10 எம்.எல்.ஏ.க்களும் தாங்கள் விரும்பும் பட்சத்தில் ராஜினாமா செய்யும் தங்கள் முடிவை சபாநாயகரிடம் நேரில் தெரிவிக்க வேண்டும்.

அப்படி செய்யும் பட்சத்தில், அவர்களுடைய வேண்டுகோள் குறித்து சபாநாயகர் இரவுக்குள் உரிய முடிவெடுக்க வேண்டும். சபாநாயகர் எடுத்த முடிவு பற்றி அவரது தரப்பில் வெள்ளிக்கிழமை (இன்று) சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும்.

பாதுகாப்பு

சபாநாயகர் முன்பு ஆஜராவதற்காக பெங்களூருவுக்கு வரும் 10 எம்.எல்.ஏ.க்களுக்கும் கர்நாடக மாநில டி.ஜி.பி. உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த உத்தரவு வழக்கு தொடர்ந்த 10 எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும் பொருந்தும். மற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு பொருந்தாது.

இந்த வழக்கு வெள்ளிக் கிழமை (இன்று) மீண்டும் விசாரிக்கப்படும்.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறினார்கள்.

சபாநாயகர் மனு

இதைத்தொடர்ந்து சபாநாயகர் ரமேஷ்குமாரின் சார்பில், 10 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா குறித்து உடனே முடிவு எடுக்குமாறு வற்புறுத்தக்கூடாது என்று கோரி பிற்பகலில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

சபாநாயகரின் சார்பில் மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு ஆஜராகி, இந்த மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டார். அதற்கு நீதிபதிகள், 10 எம்.எல்.ஏ.க்கள் மனு மீது காலையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட்டதால், இந்த விஷயத்தில் சபாநாயகர் தனது முடிவை எடுக்க வேண்டும் என்றும், சபாநாயகரின் மனு வெள்ளிக்கிழமை (இன்று) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவித்தனர்.

எம்.எல்.ஏ.க்கள் ஆஜர்

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து, 10 எம்.எல்.ஏ.க்களும் மும்பையில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று மாலை 5.30 மணிக்கு பெங்களூரு வந்து சேர்ந்தனர். எச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அவர்கள் நேராக விதான சவுதாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு 6.05 மணிக்கு சபாநாயகர் ரமேஷ்குமார் அலுவலகத்துக்கு சென்று அவர் முன்பு ஆஜரானார்கள். இந்த சந்திப்பு 7 மணி வரை நடைபெற்றது.

சபாநாயகரை சந்தித்து பேசிய பின் எம்.எல்.ஏ.க்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

அதன்பிறகு சபாநாயகர் ரமேஷ்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், “என்னை சந்தித்த 10 எம்.எல்.ஏ.க்களும் இன்று (அதாவது நேற்று) மீண்டும் என்னிடம் தங்கள் ராஜினாமா கடிதங்களை கொடுத்தனர். அவை முறைப்படி உள்ளன. சட்ட விதிமுறைகளின்படி ராஜினாமா கடிதங்களை பரிசீலித்து முடிவு எடுப்பேன். இந்த விஷயத்தில் அவசரப்படமாட்டேன்” என்று கூறினார்.

மந்திரிசபையின் அவசர கூட்டம்

இந்த பரபரப்பான சூழ்நிலையில், கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது.

இதையொட்டி முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் நேற்று மந்திரிசபை அவசரமாக கூடி, கூட்டணி அரசை காப்பாற்ற மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், சட்டசபையில் நிதி மசோதாவை நிறைவேற்றுவது குறித்தும் ஆலோசனை நடத்தியது.

கூட்டம் முடிந்தபின் ஊரக வளர்ச்சி துறை மந்திரி கிருஷ்ண பைரேகவுடா நிருபர்களிடம் பேசுகையில், தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியில் இருந்து கூட்டணி அரசு மீண்டு வரும் என்றும், சட்டசபையில் பாரதீய ஜனதா நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதை சந்திக்க தயார் என்றும் கூறினார்.

முன்னதாக, கூட்டணி அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிப்பது குறித்து மூத்த காங்கிரஸ் தலைவர்களுடன் குமாரசாமி ஆலோசனை நடத்தினார்.

பின்னர் நிருபர்கள் அவரை சந்தித்து, 16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா கடிதம் கொடுத்து இருப்பதால், பதவி விலகுவீர்களா? என்று கேட்டனர்.

அதற்கு குமாரசாமி, “நான் ஏன் ராஜினாமா செய்யவேண்டும். அதற்கு இப்போது என்ன அவசியம் வந்தது?” என்றார்.