2 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகரிடம் கடிதம் தினேஷ் குண்டுராவ் பேட்டி


2 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகரிடம் கடிதம் தினேஷ் குண்டுராவ் பேட்டி
x
தினத்தந்தி 11 July 2019 10:00 PM GMT (Updated: 11 July 2019 8:45 PM GMT)

2 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளோம் என்று தினேஷ் குண்டுராவ் கூறினார்.

பெங்களூரு,

2 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளோம் என்று தினேஷ் குண்டுராவ் கூறினார்.

கர்நாடக அரசியல் சிக்கல் குறித்து கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பாடம் புகட்ட வேண்டும்

ராமலிங்கரெட்டியை தவிர ராஜினாமா செய்துள்ள மற்ற எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யுமாறு சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளோம். சிலரின் ராஜினாமா கடிதங்கள் சட்டப்படி இல்லை. அவர்களை மீண்டும் ராஜினாமா கடிதங்களை கொடுக்குமாறு அறிவுறுத்தி உள்ளேன் என்று சபாநாயகர் என்னிடம் கூறினார். எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ் ஜார்கிகோளி, மகேஷ் குமடள்ளி ஆகியோரை தகுதி நீக்கம் செய்யுமாறு சபாநாயகரிடம் கோரியுள்ளோம். நாட்டில் ஜனநாயக முறைப்படி நடைபெறும் ஆட்சியை கவிழ்க்க சிலர் சதி செய்கிறார்கள்.

பதவி வேண்டாம் என்று ராஜினாமா கடிதம் கொடுப்பவர்கள் தேர்தலில் எதற்காக நிற்க வேண்டும். வேண்டுமென்றால் அவர்கள் சுயேச்சையாக போட்டியிட வேண்டும். நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. குதிரை பேரத்தை தடுப்பதே எங்களின் நோக்கம். கட்சிக்கு துரோகம் செய்யும் எம்.எல்.ஏ.க்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். மாநில மக்கள், அத்தகையவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும். சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.

நம்பிக்கையில்லா தீர்மானம்

சட்டசபை கூட்டத்தில் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவது குறித்து பா.ஜனதா பேசவில்லை. நாங்களே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த தயாராக உள்ளோம். சட்ட சபையில் எங்கள் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்போம்.

இவ்வாறு தினேஷ் குண்டுராவ் கூறினார்.

விதான சவுதாவில் நேற்று பரபரப்பான காட்சிகள் அரங்கேறியதால் விதானசவுதா முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Next Story