நாமகிரிப்பேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்து டிராக்டர் டிரைவர் சாவு


நாமகிரிப்பேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்து டிராக்டர் டிரைவர் சாவு
x
தினத்தந்தி 11 July 2019 11:00 PM GMT (Updated: 11 July 2019 8:51 PM GMT)

நாமகிரிப்பேட்டை அருகே, டிராக்டர் டிரைவர் கிணற்றில் தவறி விழுந்து இறந்தார். அவரது பிணத்துடன் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராசிபுரம், 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள பிலிப்பாகுட்டை சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் கந்தன் மகன் முத்துசாமி (வயது 45), டிராக்டர் டிரைவர். இவருக்கு சாந்தி (37) என்ற மனைவியும், ஆர்த்தி (13), கார்த்திகா (10) மற்றும் 10 மாதத்தில் தனிஷ்கா ஆகிய 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். முத்துசாமி நேற்று மாலை கப்பலூத்து அருகே உள்ள நெய்க்காத்துகுட்டை பகுதியைச் சேர்ந்த விவசாயி சண்முகம் (50) என்பவரது தோட்டத்து கிணற்றில் தண்ணீர் விடுவதற்காக டிராக்டரில் தண்ணீர் ஏற்றி வந்தார்.

அந்த டிராக்டரில் இருந்து கிணற்றுக்குள் தண்ணீரை விட டிராக்டருடன் இணைக்கப்பட்ட குழாயை கிணற்றுக்குள் விட்டதாக கூறப்படுகிறது. அப்போது அந்த குழாய் எதிர்பாராத விதமாக உடைந்து விட்டதால் முத்துசாமி கிணற்றில் தவறி விழுந்தார். அந்த கிணறு சுமார் 70 அடி ஆழம் கொண்டது. 2 அடி மட்டும் தண்ணீர் இருந்துள்ளது. கிணற்றுக்குள் விழுந்த முத்துசாமி பலத்த அடிபட்டு இறந்துவிட்டார்.

இது குறித்து தகவல் அறிந்த ராசிபுரம் தீயணைப்பு படையினர் நிலைய அதிகாரி ராதாகிருஷ்ணன் தலைமையில் விரைந்து சென்று கயிறு மூலம் கிணற்றில் இருந்து முத்துசாமி உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். பின்னர் இறந்த முத்துசாமியின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக தனியார் ஆம்புலன்சில் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதையறிந்த முத்துசாமியின் மனைவி, உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கப்பலூத்து பிரிவு ரோடு அருகே ஆம்புலன்சில் கொண்டு வரப்பட்ட அவரது உடலை தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் அவர்கள் இறந்த முத்துசாமிக்கு 3 பெண் குழந்தைகள் இருப்பதால் அவர்களது எதிர்காலத்தை கருத்திற்கொண்டு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறி முத்துசாமியின் பிணத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாலை 5.30 மணிக்கு தொடங்கிய சாலை மறியல் இரவு 7.30 மணி வரை நீடித்தது. இதனால் மெட்டாலாவில் இருந்து முள்ளுக்குறிச்சி செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராமகிருஷ்ணன் (பேளுக்குறிச்சி), இளங்கோ (நாமகிரிப்பேட்டை) மற்றும் ஆயில்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் சாலை மறியல் செய்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் அவர்களிடத்தில் உறுதி அளித்தனர். அதன்பேரில் அவர்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

இந்த சம்பவம் பற்றி ஆயில்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முத்துசாமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story