பெங்களூருவில் காதலியின் கண் எதிரே தனியார் நிறுவன ஊழியர் குத்திக் கொலை மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு


பெங்களூருவில் காதலியின் கண் எதிரே தனியார் நிறுவன ஊழியர் குத்திக் கொலை மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 12 July 2019 3:00 AM IST (Updated: 12 July 2019 2:40 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் காதலியின் கண் எதிரேயே தனியார் நிறுவன ஊழியர் குத்திக் கொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது. தலைமறைவான மர்மநபரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

பெங்களூரு, 

பெங்களூருவில் காதலியின் கண் எதிரேயே தனியார் நிறுவன ஊழியர் குத்திக் கொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது. தலைமறைவான மர்மநபரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

காதல்

பெங்களூரு சம்பிகேஹள்ளி அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் வசித்து வந்தவர் ஞானேந்திர ரெட்டி (வயது 28). இவரது சொந்த ஊர் ஆந்திர மாநிலம் ஆகும். பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் அனுஷ்கா என்பவரும் வேலை செய்கிறார். இருவரும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றியதால், ஞானேந்திர ரெட்டிக்கும், அனுஷ்காவுக்கும் இடையே பழக்கம் உண்டானது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர்.

சம்பிகேஹள்ளி சர்வீஸ் ரோட்டில் தனியார் தங்கும் விடுதியில் அனுஷ்கா தங்கி இருந்து வேலைக்கு சென்றார். அனுஷ்காவை பார்க்க தனியார் தங்கும் விடுதிக்கு ஞானேந்திர ரெட்டி சென்றிருந்தார். தனது காதலன் வந்திருப்பது பற்றி அறிந்த அனுஷ்காவும் தங்கும் விடுதியின் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்து கொண்டிருந்தார்.

குத்திக் கொலை

அந்த சந்தர்ப்பத்தில் அங்கு வந்த ஒரு மர்மநபர் திடீரென்று ஞானேந்திர ரெட்டி வைத்திருந்த செல்போனை பறித்தார். ஆனால் அவர் செல்போனை கொடுக்க மறுத்துவிட்டார். இந்த நிலையில், மர்மநபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஞானேந்திர ரெட்டியை சரமாரியாக குத்தினார். பின்னர் அந்த மர்மநபர் செல்போனை பறித்துவிட்டு ஓடிவிட்டார். கத்திக்குத்து காயத்துடன் ரத்த வெள்ளத்தில் ஞானேந்திர ரெட்டி உயிருக்கு போராடுவதை கண்டு அனுஷ்கா துடிதுடித்தார். உடனடியாக அவர் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஞானேந்திர ரெட்டி இறந்துவிட்டார்.

அவரது உடலை பார்த்து தனது கண்முன்னேயே கொலை செய்து விட்டார்களே எனக்கூறி அனுஷ்கா கதறி அழுத காட்சி பரிதாபமாக இருந்தது. செல்போனை கொள்ளையடிக்கும் நோக்கத்தில் ஞானேந்திர ரெட்டியை மர்மநபர் கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது தெரியவில்லை. இதுகுறித்து சம்பிகேஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடிவருகின்றனர். காதலியின் கண் எதிரே காதலன் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story