மாவட்ட செய்திகள்

குஜிலியம்பாறை அருகே, சொத்து தகராறில் விவசாயி அடித்து கொலை - தம்பதி உள்பட 3 பேர் கைது + "||" + Near Kujiliyampara, Farmer beaten to death in property dispute

குஜிலியம்பாறை அருகே, சொத்து தகராறில் விவசாயி அடித்து கொலை - தம்பதி உள்பட 3 பேர் கைது

குஜிலியம்பாறை அருகே, சொத்து தகராறில் விவசாயி அடித்து கொலை - தம்பதி உள்பட 3 பேர் கைது
குஜிலியம்பாறை அருகே சொத்து தகராறில் விவசாயி அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தம்பதி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
குஜிலியம்பாறை,

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள சுக்காம்பட்டியை சேர்ந்தவர் சக்கணன். அவருடைய மனைவி பெரியக்காள் (வயது 60). இவர்களது மகன் சக்திவேல் (வயது 39). விவசாயி. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு சக்கணன் இறந்து விட்டார். இதனால் உறவினர்களின் சம்மதத்துடன் பெரியக்காளை, சக்கணனின் தம்பியான விவசாயி ராமசாமி (66) திருமணம் செய்து கொண்டார்.

ராமசாமியும், பெரியக்காளும் அதேபகுதியில் உள்ள களத்து வீட்டில் வசித்து வந்தனர். இதேபோல் சக்திவேல் தனது குடும்பத்தினருடன் அதே பகுதியில் உள்ள களத்து வீட்டில் வசித்து வருகிறார். ராமசாமிக்கும், சக்திவேலுவுக்கும் இடையே சொத்து தகராறு இருந்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை வீட்டை விட்டு வெளியே சென்ற ராமசாமி நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதற்கிடையே வெள்ளப்பாறை அருகே புங்கமடப்பட்டி மாங்கனி நகர், ரெயில்வே தண்டவாளத்தில் ராமசாமி பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே ரெயில்வே தண்டவாளம் அருகே உள்ள முட்புதருக்குள் சாக்குப்பை கிடந்தது. அதில் ரத்தக்கறை படிந்திருந்தது.

இதனால் ராமசாமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற அவருடைய உறவினர்கள் கருதினர். இதுதொடர்பாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஆம்புலன்சில் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ராமசாமியின் உடல் மீண்டும் மாங்கனி நகருக்கு கொண்டு வரப்பட்டது.

இந்தநிலையில் ராமசாமி கொலை செய்யப்பட்டதாகவும், கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் அவருடைய உறவினர்கள் திண்டுக்கல்-கரூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த எரியோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சவுந்திரராஜன், குஜிலியம்பாறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

பின்னர் மறியலில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போலீசார் சமரசம் செய்தனர். இதனையடுத்து ராமசாமியின் உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அந்த சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ராமசாமியின் சாவு தொடர்பாக குஜிலியம்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சிவக்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சொத்து தகராறு காரணமாக சக்திவேல் மற்றும் அவருடைய மகன் திவாகர் (18) ஆகியோர் சேர்ந்து ராமசாமியை தீர்த்து கட்டியது தெரியவந்தது. இதனையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த சக்திவேலின் மனைவி ராணியும் (36) கைது செய்யப்பட்டார்.

கைதான சக்திவேல் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

எனக்கும் ராமசாமிக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. நேற்று முன்தினம் மதியம் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த நானும், எனது மகனும் சேர்ந்து ராமசாமியின் தலையில் இரும்பு கம்பியால் அடித்தோம். இதில் அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார். இதனையடுத்து அவருடைய உடலை, சாக்குப்பையில் கட்டி வீட்டில் வைத்தோம்.

ரெயிலில் அடிபட்டு அவர் இறந்தது போல இருக்கட்டும் என்று கருதி தண்டவாளத்தில் பிணத்தை போட முடிவு செய்தோம். அதன்படி நானும், எனது மகனும் நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் சாக்குப்பையை மாங்கனி நகர் ரெயில்வே தண்டவாளம் அருகே கொண்டு சென்றோம். பின்னர் சாக்குப்பையில் இருந்து எடுத்து தண்டவாளம் அருகே உடலை போட்டு விட்டு சென்றோம்.

ஆனால் சாக்குப்பையை எடுத்து செல்ல மறந்து விட்டோம். புதருக்குள் கிடந்த சாக்குப்பையில் ரத்தக்கறை படிந்திருந்தது. இதனால் அவர் கொலை செய்யப்பட்டதை போலீசார் உறுதிப்படுத்தினர். மேலும் விசாரணை நடத்தி எங்களை கைது செய்து விட்டனர்.

இவ்வாறு வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.