தொடர்ந்து 3-வது நாளாக மழை நிலத்தடி நீர்மட்டம் உயரும் வாய்ப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி


தொடர்ந்து 3-வது நாளாக மழை நிலத்தடி நீர்மட்டம் உயரும் வாய்ப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 11 July 2019 10:30 PM GMT (Updated: 11 July 2019 10:30 PM GMT)

புதுச்சேரியில் நேற்று தொடர்ந்து 3-வது நாளாக இரவில் மழை பெய்தது. இந்த மழை காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயரும் வாய்ப்பு உள்ளதால் விவசாயிகள், பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

புதுச்சேரி, 

புதுவையில் கடந்த 2 நாட்களாக இரவு நேரத்தில் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து 2 நாட்களாக இரவில் பெய்த மழை காரணமாக நேற்று பகல் நேரத்தில் புதுச்சேரியில் வெயிலின் தாக்கம் மிகவும் குறைந்து காணப்பட்டது. மேலும் நேற்று காலையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் லேசாக வெயில் அடித்தது.

மாலையில் மீண்டும் வானில் கருமேகங்கள் திரண்டு மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இரவில் குளிர்ந்த காற்று வீசியது.

இரவு 10.30 மணி முதல் மழை பெய்யத்தொடங்கியது. முதலில் மிதமாக பெய்யத் தொடங்கிய மழை சிறிது நேரத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழையாக கொட்டியது. இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நகரின் பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றன. பின்னர் சிறிது நேரத்தில் மழை பெய்வது குறைந்தது. இரவு முழுவதும் விட்டு விட்டு மழை பெய்த வண்ணம் இருந்தது.

புதுவையில் 3-வது நாளாக தொடர்ந்து இரவில் மட்டும் மழை பெய்து வருவதால் பூமி குளிர்ந்துள்ளது. மழையால் குளங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் புதுவையில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தொடர் மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story