வார்டு மறுசீரமைப்பில் உள்ள தவறுகளை திருத்திய பின்னரே உள்ளாட்சி தேர்தலை நடத்தவேண்டும் அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்


வார்டு மறுசீரமைப்பில் உள்ள தவறுகளை திருத்திய பின்னரே உள்ளாட்சி தேர்தலை நடத்தவேண்டும் அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 11 July 2019 11:00 PM GMT (Updated: 11 July 2019 10:36 PM GMT)

வார்டு மறுசீரமைப்பில் உள்ள தவறுகளை திருத்திய பின்னரே உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

புதுச்சேரி, 

புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுவை மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்பதில் அ.தி.மு.க.வுக்கு மாறுபட்ட கருத்து இல்லை. அதேநேரத்தில் தேர்தல் நடத்தும் முன்பு அமைக்கப்பட்ட வார்டு மறுசீரமைப்பில் பல்வேறு குழப்பங்களும், குளறுபடிகளும் உள்ளதை ஆதாரத்துடன் அமைச்சர் தலைமையில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் தெரிவித்தோம். அவ்வாறு தெரிவித்து ஒரு வருடம் ஆனநிலையிலும் திருத்தம் செய்யவில்லை. அதற்கு அரசும், கவர்னரும் நடவடிக்கை எடுக்கவில்லை.

நகராட்சி என்ற அடிப்படையில் புதுச்சேரி, உழவர் கரையில் வார்டு ஒன்றுக்கு சுமார் 7 ஆயிரம் வாக்காளர்கள் அடிப்படையிலும், காரைக்காலில் வார்டுக்கு 5 ஆயிரம் வாக்காளர்கள் அடிப்படையிலும், மாகி, ஏனாமில் 4 ஆயிரம் வாக்காளர்கள் என்ற அடிப்படையிலும் வார்டுகளை பிரித்துள்ளனர். புதுச்சேரி நகராட்சியில் இருந்த 42 வார்டுகள் 33 வார்டுகளாகவும், உழவர்கரை நகராட்சியில் இருந்த 37 வார்டுகள் 42 வார்டுகளாகவும் மாற்றப்பட்டுள்ளன. நகராட்சி வார்டுகளை கொம்யூன் பஞ்சாயத்தில் சேர்த்துள்ளனர். குறைகளை திருத்தாமல் நகராட்சிகளில் 122 வார்டுகள் இருந்ததை இப்போது 116 வார்டுகள் ஆக்கி உள்ளனர்.

நகராட்சி தலைவரை மக்கள்தான் நேரடியாக தேர்ந்தெடுக்க வேண்டும். தமிழகத்தில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. புதுவையில் பிற்படுத்தப்பட்டோர், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. அரசு நினைத்திருந்தால் இதுபோன்ற பணிகளை 3 மாதத்தில் முடித்திருக்கலாம்.

கடந்த காலங்களில் மாநில தேர்தல் ஆணையர் பதவிக்கு அரசு மூலம் 3 பேர் கொண்ட பட்டியல் அரசுக்கு அனுப்பப்பட்டு அதில் ஒருவரை கவர்னர் தேர்வு செய்வார். அது ஒரு நியமன பதவிதான். ஆனால் இப்போது மாநில தேர்தல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு செய்துள்ளனர். கவர்னர் அலுவலகத்தில் பணிபுரியும் ஓய்வுபெற்ற நபர் ஒருவரை இந்த பதவிக்கு கொண்டுவர கவர்னர் முயற்சிப்பதாக தெரிகிறது. கவர்னர் தனது சொந்த விருப்பு, வெறுப்புகளுக்கு மாநில தேர்தல் ஆணையர் பதவியை பயன்படுத்தக்கூடாது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள விதிமுறைகளைத்தான் அவர் பின்பற்ற வேண்டும்.

வார்டு மறுசீரமைப்பு தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தில் அரசியல் கட்சிகள் சுட்டிக்காட்டிய தவறுகளை திருத்திய பின்னரே உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என்பது முதல்-அமைச்சரின் எண்ணமாக உள்ளது. புதுவை என்ன சர்வாதிகார மாநிலமா? உள்ளாட்சித்துறை அமைச்சர் இந்த விஷயத்தில் நியாயமான நிலைப்பாட்டை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

அவர் மேலும் கூறும்போது, மின் கட்டணம் தொடர்பாக மின்துறை அதிகாரிகள் பல்வேறு தலைப்புகளில் மக்களுக்கு தெரியாமல் பணத்தை வசூலித்து வருகின்றனர். மக்கள் இதுகுறித்து கேட்டால் சரியாக பதில் சொல்வதில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.

Next Story