பழனி முருகன் கோவிலில், நவபாஷாண சிலையை கடத்த திட்டமிட்டது யார்? போலீசார் தீவிர விசாரணை


பழனி முருகன் கோவிலில், நவபாஷாண சிலையை கடத்த திட்டமிட்டது யார்? போலீசார் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 12 July 2019 4:15 AM IST (Updated: 12 July 2019 4:37 AM IST)
t-max-icont-min-icon

பழனி முருகன் கோவிலில் நவபாஷாண சிலையை கடத்த திட்டமிட்டது யார்? என்பது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பழனி,

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலின் மூலவர் சிலை நவபாஷாணத்தால் ஆனது. அது சேதமடைந்ததாக கூறி, கடந்த 2004-ம் ஆண்டு 200 கிலோவில் ஐம்பொன்னால் ஆன உற்சவர் முருகன் சிலை செய்யப்பட்டு, நவபாஷாண சிலைக்கு முன்பு வைத்து பூஜைகள் நடந்தது. இதற்கு பக்தர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.

மேலும் ஐம்பொன் சிலையின் நிறம் மாறியது. இதையடுத்து அந்த சிலையை செய்ததில் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. அதன்பேரில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சிலை செய்ததில் முறைகேடுகள் நடந்தது உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து ஐம்பொன் சிலை செய்த ஸ்தபதி முத்தையா, அப்போதைய கோவில் இணை ஆணையர் கே.கே.ராஜா, உதவி ஆணையர் புகழேந்தி, அறநிலையத்துறை தலைமையிட நகை சரிபார்ப்பு அதிகாரி தேவேந்திரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே ஐம்பொன் சிலையை கோவிலில் வைத்து விட்டு, நவபாஷாணத்தினாலான மூலவர் சிலையை கடத்த திட்டமிட்ட திடுக்கிடும் தகவல் வெளியானது. இதனால் தற்போது இந்த வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. நவபாஷாண சிலையை கடத்த திட்டமிட்டது யார்? என்பது குறித்த விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பழனியில் முகாமிட்டு விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமையில் 5 துணை சூப்பிரண்டுகள், 20-க்கும் மேற்பட்ட போலீசார் பழனிக்கு நேற்று வந்தனர். பின்னர் அவர்கள் பழனி-திண்டுக்கல் சாலையில் உள்ள பாலாறு-பொருந்தலாறு இல்லத்தில் வழக்கு தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, நவபாஷாண சிலையை கடத்த திட்டமிட்டது பற்றி விசாரணை நடந்து வருகிறது. இதில் சிலருக்கு தொடர்பு உள்ளது. அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த இருக்கிறோம் என்றார். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பழனியில் முகாமிட்டிருப்பதால் பழனி கோவில் அதிகாரிகள், ஊழியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

Next Story