படகு சவாரி செய்தபோது செல்பி எடுக்க முயற்சி, கொடைக்கானல் நட்சத்திர ஏரிக்குள் தவறி விழுந்த வாலிபர்
படகு சவாரி செய்தபோது செல்பி எடுக்க முயன்றதால், கொடைக்கானல் நட்சத்திர ஏரிக்குள் தவறி விழுந்த வாலிபர் மீட்கப்பட்டார்.
கொடைக்கானல்,
‘மலைகளின் இளவரசி‘யான கொடைக்கானல் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது அங்குள்ள நட்சத்திர ஏரி தான். இந்த ஏரியில் சுற்றுலா பயணிகள் படகுசவாரி செய்து மகிழ்வர். அதன்படி கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த சென்னையை சேர்ந்த 4 வாலிபர்கள் நேற்று மாலை படகு சவாரி செய்தனர்.
தாங்களே செலுத்தும் பெடல்படகை வாடகைக்கு எடுத்து அவர்கள் இயக்கியுள்ளனர். ஏரியின் கரை அருகே படகு வந்தது. அப்போது, கரையோரத்தில் சாய்ந்திருந்த மரத்தில் தொங்கியபடி வாலிபர் ஒருவர், தாங்கள் படகு சவாரி செய்வதை செல்பி எடுக்க முயன்றார். இதில் அந்த வாலிபர் ஏரிக்குள் தவறி விழுந்து விட்டார்.
பாதுகாப்பு கவசம் எதுவும் அணியாததால் அவர் தண்ணீரில் மூழ்கினார். இதனைக்கண்ட அவருடைய நண்பர்கள் அலறினர். அந்த சத்தம் கேட்டு படகு குழாம்களில் இருந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் விரைந்து சென்று தண்ணீரில் தத்தளித்த வாலிபரை காப்பாற்றினர். கரைக்கு ஏறிவந்தவுடன் அவர்கள் யாரிடமும் சொல்லாமல் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
அவர்கள் பெயர் என்ன?, சென்னையில் எந்த இடத்தை சேர்ந்தவர்கள்? என்ற விவரம் தெரியவில்லை. எனவே இனி வருங்காலத்தில் படகு சவாரி செய்பவர்களுக்கு உயிர் காக்கும் கவசம் வழங்க வேண்டும். சவாரி செய்பவர்களின் பெயர் மற்றும் முகவரியை சேகரிக்க வேண்டும். சமீபகாலமாக படகு சவாரி செய்வோர் செல்பி எடுக்கக்கூடாது என்று விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வினியோகம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Related Tags :
Next Story