குறிஞ்சிப்பாடி அருகே, டாஸ்மாக் கடையில் ரூ.50 ஆயிரம் மதுபாட்டில்கள் திருட்டு - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
விருத்தாசலம் அருகே டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
குறிஞ்சிப்பாடி,
குறிஞ்சிப்பாடி அருகே விருப்பாச்சி கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் புலியூர்காட்டு சாகை கிராமத்தை சேர்ந்த காசிநாதன் (வயது 45) என்பவர் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்ததும் காசிநாதன் மற்றும் விற்பனையாளர் வீரப்பன் ஆகியோர் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றனர். இந்த நிலையில் நேற்று காலை டாஸ்மாக் கடை பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் விரைந்து வந்து கடைக்குள் சென்று பார்த்தனர். அப்போது கடையில் இருந்த 426 மதுபாட்டில்களை காணவில்லை.
இது குறித்த தகவலின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விருப்பலிங்கம் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று, டாஸ்மாக் கடையை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் மேற்பார்வையாளரும், விற்பனையாளரும் டாஸ்மாக் கடையை பூட்டிவிட்டு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து 46 ஆயிரத்து 610 ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்களை திருடிச்சென்றது தெரிந்தது. தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு திருட்டு நடந்த கடையில் பதிவாகியிருந்த மர்மநபர்களின் கைரேகைகளை சேகரித்து சென்றனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story