ஜோலார்பேட்டையில் இருந்து 50 வேகன்களில் குடிநீர் நிரப்பப்பட்ட ரெயில் சென்னை சென்றது
ஜோலார்பேட்டையில் இருந்து 50 வேகன்களில் குடிநீர் நிரப்பப்பட்ட ரெயில் சென்னைக்கு சென்றது.
ஜோலார்பேட்டை,
சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் ஜோலார்பேட்டையில் இருந்து ரெயில் மூலம் குடிநீர் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ.65 கோடி நிதியை ஒதுக்கி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை மேற்கொண்டார்.
இதையடுத்து அதற்கான பணிகள் ஜோலார்பேட்டை பகுதியில் இரவு, பகலாக நடந்தது. மேலும் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து 50 வேகன்கள் கொண்ட சரக்கு ரெயில் ஜோலார்பேட்டைக்கு வந்தது.
நேற்று முன்தினம் 50 வேகன்களில் தலா 50 ஆயிரம் லிட்டர் தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்றது. அதற்காக 75 பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அதில் 25 வேகன்களில் முழுகொள்ளளவான 70 ஆயிரம் லிட்டர் வரை நிரப்பிவிட்டனர். அதனால் மீதம் உள்ள வேகன்களை நிரப்பமுடியாமல் போனது. அதன் பின்னர் நேற்று முன்தினம் அனைத்து வேகன்களிலும் சரியான அளவு தண்ணீர் நிரப்பப்பட்டது.
இதனால் காலதாமதம் ஏற்பட்டதால் நேற்று ரெயிலில் சென்னைக்கு குடிநீர் அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நேற்று அதிகாலை 4.40 மணிக்கு 5-வது யார்டில் ரெயில் என்ஜின் வரவழைக்கப்பட்டு 25 லட்சம் லிட்டர் குடிநீர் நிரப்பப்பட்ட வேகன்கள் உள்ள ரெயிலில் பொருத்தப்பட்டது, பின்னர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் மகேஸ்வரன் தலைமையில் தண்ணீர் தர பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதையடுத்து மலர்தூவி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் குடிநீர் ரெயில் புறப்பட காலை 7.10 மணிக்கு சிக்னல் கொடுக்கப்பட்டு 7.15 மணிக்கு ரெயில் புறப்பட்டது.
யார்டு நிலைய மேலாளர் மதிவாணன் கொடியசைத்து ரெயிலை வழி அனுப்பி வைத்தார். குடிநீர் வேகன்கள் பொருத்தப்பட்ட ரெயிலை இயக்க டிரைவர் பாலசுந்தரம் உள்பட 2 டிரைவர்கள், 2 உதவி டிரைவர்கள் பணியில் இருந்தனர்.
நிகழ்ச்சியில் ரெயில் நிலைய மேலாளர் சுந்தரமூர்த்தி, ஒப்பந்ததாரர் வேலுமணி, கோவை அன்பு உள்பட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், ரெயில்வே அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் ஜோலார்பேட்டையில் இருந்து, சென்னைக்கு குடிநீர் எடுத்து செல்லும் பணிகளில் இரவு, பகலாக ஈடுபட்டிருந்த அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்களுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் மகேஸ்வரன் பாராட்டு தெரிவித்தார்.
சென்னைக்கு குடிநீர் செல்வதற்காக மேலும் 50 வேகன்கள் பொருத்தப்பட்ட மற்றொரு ரெயில் ராஜஸ்தானிலிருந்து, ஜோலார்பேட்டைக்கு வர உள்ளது. அதிலும் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லப்பட்ட உள்ளது. இதன்மூலம் நாள் ஒன்றுக்கு 4 முறை ரெயில்கள் இயக்கி தினசரி 1 கோடி லிட்டர் குடிநீர் சென்னை மக்களுக்கு வினியோகம் செய்ய உள்ளதாகவும், இந்த பணி தொடர்ந்து 6 மாதம் வரை நடைபெறும் என்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story