‘படிப்பில் கவனம் செலுத்தினால் உயர்ந்த நிலையை அடைய முடியும்’ முதன்மை நீதிபதி மீனாசதீஷ் பேச்சு


‘படிப்பில் கவனம் செலுத்தினால் உயர்ந்த நிலையை அடைய முடியும்’ முதன்மை நீதிபதி மீனாசதீஷ் பேச்சு
x
தினத்தந்தி 12 July 2019 11:00 PM GMT (Updated: 12 July 2019 5:28 PM GMT)

படிப்பில் கவனம் செலுத்தினால் மட்டுமே மாணவிகள் உயர்ந்த நிலையை அடைய முடியும் என்று மாவட்ட முதன்மை நீதிபதி மீனாசதீஷ் கூறினார்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில், நேற்று காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஹெலன் மேரி வரவேற்றார். தாளாளர் அமலமேரி, முன்னாள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை நீதிபதி மீனாசதீஷ் தலைமை தாங்கி பேசியதாவது:-

காமராஜர் போன்ற ஒரு தலைவர் இருக்க வேண்டும் என்பதே நம் அனைவரின் ஆசை. ஆங்கிலேயர் காலத்தில் அவர்களுக்கு இணையாக திட்டம் தீட்டி அணைகளை கட்டியவர் காமராஜர். அக்காலத்தில் குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் பட்டாசு தொழிற்சாலைக்கு சென்றனர். இதைப் பார்த்து வருத்தம் அடைந்த காமராஜர் மதிய உணவு திட்டத்துடன் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்தார். பெரும் வசதி படைத்தவர்கள் மட்டுமே கல்வி கற்ற நிலையில், அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்று போராடினார்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் செய்தவர்களுக்கு தண்டனை கொடுத்தாலும், மனம் சமாதானம் அடைவதில்லை. காரணம் இது போன்ற பாலியல் குற்றங்களை முற்றிலும் தடுக்க வேண்டும். பெண் குழந்தைகள் நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் பற்றி கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். 18 வயது பூர்த்தி அடையாத அனைவரும் குழந்தைகள் தான். குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் கெட்ட சம்பவங்களை பெற்றோரிடம் உடனே தயங்காமல் தெரிவிக்க வேண்டும்.

பெண்களின் பலவீனங்கள் தான் குற்றங்கள் அதிகரிக்க காரணமாகிறது. 9-ம் வகுப்பில் இருந்து பிளஸ்-2 வரை படிக்கும் மாணவிகள் இந்த வயதில் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். படித்தால் மட்டுமே நீங்கள் உயர்ந்த நிலையை அடைய முடியும். எக்காரணம் கொண்டும் படிப்பை பாதியில் விட்டுவிடக்கூடாது. படிக்கும் போது மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக காமராஜர் குறித்து நடந்த பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற 10 பேர், கட்டுரை போட்டியில் 13 பேர், ஓவிய போட்டியில் 14 பேர், திருக்குறல் ஒப்புவித்தல் போட்டியில் 12 பேர்களுக்கு மாவட்ட முதன்மை நீதிபதி மீனாசதீஷ் பரிசு, சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். இந்த விழாவையொட்டி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் பள்ளி மாணவிகள், ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

Next Story