கொழும்பில் இருந்து கடத்தல் சென்னை விமான நிலையத்தில் ரூ.96 லட்சம் தங்கம் சிக்கியது 9 பேரிடம் விசாரணை


கொழும்பில் இருந்து கடத்தல் சென்னை விமான நிலையத்தில் ரூ.96 லட்சம் தங்கம் சிக்கியது 9 பேரிடம் விசாரணை
x
தினத்தந்தி 13 July 2019 3:30 AM IST (Updated: 13 July 2019 12:04 AM IST)
t-max-icont-min-icon

சென்னை விமான நிலையத்தில் கொழும்பில் இருந்து கடத்தி வந்த ரூ.96 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 9 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாட்டில் இருந்துவரும் விமானங்களில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் விமான நிலையத்தில் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

அப்போது இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து சென்னைக்கு விமானம் வந்தது. அதில் வந்த சென்னையை சேர்ந்த அலாவுதீன் (வயது 25), புதுக்கோட்டையை சேர்ந்த முஜீப் ரகுமான்(25), ராமநாதபுரத்தை சேர்ந்த வன்னியப்ப காசிநாதன்(58), கலந்தர்உசேன் (26), இமாம்தீன் சதக்கத்துல்லா(26), தஸ்கர் நிசாம்(33), முசபீர்(28), முகமது அசாருதீன் (29), சாதிக் அலி(25) ஆகிய 9 பேரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். ஆனால் அதில் எதுவும் இல்லை. 9 பேரையும் தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் அவர்கள், தங்கள் உள்ளாடைகளுக்குள் தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ.96 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 700 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இவர்கள் யாருக்காக தங்கத்தை கொழும்பில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்தனர்? என பிடிபட்ட 9 பேரிடமும் விசாரித்து வருகின்றனர்.

Next Story